தமிழீழப் போர்: இந்தியா - இலங்கை இடையிலான ஆவணங்கள் அழிப்பு
இலங்கை அரசு -விடுதலைப்புலிகள் இடையிலான போரின் போது அந்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் நிலவிய உறவுகள் குறித்த தகவல்கள் அடங்கிய முக்கியமான ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் உள்ள காமன்வெல்த் அலுவலகம், தேசிய ஆவண காப்பகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. ஃபில் மில்லர் என்ற வரலாற்று ஆராய்ச்சியாளர் தகவல் அறியும் ஏற்பாட்டின் கீழ் இத்தகவல்களை அரசிடம் இருந்து கேட்டுப்பெற்றுள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள், ஆயுத விற்பனை, இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரியோர் உள்ளிட்ட விவரங்கள் அந்த ஆவணங்களில் இருந்ததாக தெரிகிறது. வழக்கமான விதிகளின்படியே இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக காமன்வெல்த் அலுவலகம் தெரிவித்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அழித்தது சட்ட விரோதமான செயல் என தமிழ் தகவல் மையம் என்ற அமைப்பின் நிறுவனர் வைரமுத்து வரதகுமார் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவத்திற்கு இங்கிலாந்து விமானப்படையினர் தந்த பயிற்சியை மறைப்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை மறைப்பதே ஆவண அழிப்பின் நோக்கமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.