மக்கள் தொகையில் சீனாவை இந்தியா 2024-ஆம் ஆண்டு விஞ்சிவிடும் என ஐநா தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையின்படி, உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடமாக இருக்கும் சீனாவில் தற்போது 141 கோடி மக்கள் தொகை இருப்பதாவும், அதற்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 134 கோடி மக்கள் தொகை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 வருடங்களுக்கு பின் அதாவது 2024-ஆம் ஆண்டு சீனாவை விட இந்தியா மக்களை தொகையில் விஞ்சிவிடும் எனவும் அந்த புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டும் ஐநா, இதே போன்ற புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டிருந்தது. அப்போது, 2022-ஆம் ஆண்டு மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரத்தின் படி 2024-ஆம் ஆண்டே சீனாவை இந்தியாவை மிஞ்சும் என தெரிவித்துள்ளது.
2024-ஆம் ஆண்டுவாக்கில் இந்தியா, சீனாவில் தலா 144 கோடி மக்கள் தொகை இருக்கும் என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2030-ஆம் ஆண்டு 150 கோடி மக்கள் இந்தியாவில் இருப்பார்கள் என்றும், 2050-ஆம் ஆண்டுவாக்கில் 166 கோடியாக இந்திய மக்கள் தொகை உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 2030-ஆம் ஆண்டிற்கு பின் சீன மக்கள் தொகை மெதுவாக சரியும் எனவும் கூறப்பட்டுள்ளது.