பிரதமர் மோடி பயணம் : இந்தியா-ஜப்பான் ஒப்பந்தங்கள் கையெழுத்து
பாதுகாப்புத்துறை, ரயில், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா-ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள தொழில் முனைவோர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவில் தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். இதேபோல் ஜப்பான் வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றினார். அப்போது சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
பின்னர் டோக்யோவில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே சந்திப்பு நடைபெற்றது. அப்போது ராணுவம், பொருளாதார துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து இருவரும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில், பாதுகாப்புத்துறை, ரயில்வே, தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, இருநாடுகள் உறவின்மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறினார். உலக அமைதிக்காக இந்தியா, ஜப்பான் இணைந்து பாடுபடும் என்றும் தெரிவித்தார். பின்னர், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் இந்தியாவுக்கு புறப்பட்டார்.