கொரோனாவிலிருந்து மீண்ட நூறு வயதை கடந்த முதியவர்..!
எத்தியோப்பியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நூறு வயதைக் கடந்த முதியவர் ஒருவர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளார்.
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 99 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் வயது வித்தியாசமின்றி இதுவரை 4 லட்சத்து 96ஆயிரத்து 796 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் 53 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து ஆறுதல் அளித்துள்ளனர்.
இந்நிலையில், எத்தியோப்பியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நூறு வயதைக் கடந்த முதியவர் ஒருவர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளார்.
அப டிலகன் என்ற முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 114 வயது என குடும்பத்தினரால் கூறப்படும் நிலையில் அந்த முதியவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரம் ஆக்சிஜன் கொடுக்கபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த டிலகன் சிகிச்சைப் பலனால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். கிட்டத்தட்ட 14 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நிலையில் அப டிலகன் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து தெரிவித்த மருத்துவர் ஒருவர், முதியவருக்கு 114 வயது என குடும்பத்தினர் தெரிவித்தனர். உலகிலேயே அதிக வயதுடைய நபராக இவர் இருக்கலாம். ஆனால் பிறப்பு சான்றிதழ் இல்லாததால் நாம் நிரூபிக்க முடியாது. ஆனால் அவரது மருத்துவ கணிப்புப்படி அவருக்கு 109 வயதுக்கு மேல் இருக்கலாம். 80 வயது தாண்டியவர்களுக்கு கொரோனா வந்தால் உயிர் பிழைப்பது கடினம். ஆனால் இவர் ஆச்சரியாமனவர். கொரோனாவிடம் இருந்து மீண்டு விட்டார். அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
எத்தியோப்பியாவில் 5000க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. இதுவரை 81 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்