இலங்கையில் 4 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு
இலங்கையில் 4 பேர் கொண்ட அமைச்சரவை புதிதாக பொறுப்பேற்றுள்ளது.
இலங்கையில் மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மகிந்தா ராஜபக்ச தவிர அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 26 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து 4 புதிய அமைச்சர்களுக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் நேற்று வரை நிதி அமைச்சராக இருந்தவரும் பிரதமர் மகிந்தா ராஜபக்சவின் தம்பியுமான பசில் ராஜபக்ச சேர்க்கப்படவில்லை. நீதித்துறை அமைச்சராக இருந்த அலி சாப்ரி நிதியமைச்சராக்கப்பட்டுள்ளார். ஜிஎல் பெரிஸ் வெளியுறவுத்துறையும் தினேஷ் குணவர்த்தனேவுக்கு கல்வித்துறையும் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பொறுப்பு ஜான்ஸ்டன் பெர்னான்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கையில் புதிய அமைச்சரவையில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தேசிய அரசு அமைப்பதாகவும் இதில் பங்கேற்க அனைத்து எதிர்க்கட்சிகளும் முன் வர வேண்டும் என்றும் அதிபர் கூறியிருந்தார். நாடு எதிர்கொண்டுள்ள பிரச்னைகளுக்கு ஒருங்கிணைந்து முயற்சி செய்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சரவை ராஜினாமா செய்தது மக்களை முட்டாளாக நடத்தும் நாடகம் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இதற்கிடையே இலங்கை ரிசர்வ் வங்கி ஆளுநர் அஜித் நிவார்டு கப்ரால் ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிக்க: ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களும் போராட்டம்

