\
Nepal floods
Nepal floodsReuters

பனிப்பாறை காரணமில்லையா? கற்பனைக்கு கூட எட்டாத அந்த 'பகீர்?' நேபாள பேரழிவின் உண்மை!

வீடுகள், கிராமங்கள், உயிர்கள் என எல்லாவற்றையும் பெருவெள்ளத்துக்கு வாரிக்கொடுத்த நேபாளத்தில், மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே இந்த பேரழிவுக்கு, பனிப்பாறை உடைப்பு மட்டுமே காரணமல்ல என்ற தகவல் தெரியவந்துள்ளது.
Published on
Summary

நேபாளம்–திபெத் எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளம் பனிப்பாறை சரிவு மட்டுமல்ல, லாங்டாங் லிருங் மலையின் வடக்குப் பகுதியில் 5,000 மீட்டர் உயரத்தில் ஏற்பட்ட மாபெரும் மலைச்சரிவே முக்கிய காரணம் என புதிய செயற்கைக்கோள் ஆய்வு வெளிப்படுத்துகிறது. 20 கோடி கனமீட்டர் பாறை, பனி, சேறு கலந்து திடீர் வெள்ளம் உருவாகி, இரண்டு புதிய தடுப்பு ஏரிகள் உருவானது.

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட பெருவெள்ளம், பனிப்பாறை சரிந்ததால் மட்டும் ஏற்பட்டதல்ல என்பது புதிய செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நேபாளத்தில் 7,234 மீட்டர் உயரம் கொண்ட லாங்டாங் லிருங் மலையின் வடக்குப் பகுதியில் மிகப்பெரிய மலைச்சரிவு ஏற்பட்டதே பேரழிவுக்கு முக்கிய காரணம் என இந்தியாவைச் சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சி நிறுவனமான Geospatial Programme at the Takshashila Institution தெரிவித்துள்ளது.

சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் மலையின் ஒரு பகுதி உடைந்து, அதன் மேல் இருந்த பனிப்பாறையின் பெரும் பகுதியோடு பள்ளத்தாக்கில் சரிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாறையோடு சேர்ந்த பனி சரிவு, கீழ்நோக்கி நகர்ந்து மிகப்பெரிய சேறு மற்றும் சகதியுடன் வெள்ளத்தை உருவாக்கி, திடீர் பெருவெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சரிவில் சுமார் 20 கோடி கனமீட்டர் அளவுக்கு பாறைகள் மற்றும் கசடுகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அந்த ஆராய்ச்சி விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

Nepal floods
Nepal floodsReuters

பேரழிவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட லாங்டாங் லிருங் மலையின் செயற்கைக்கோள் படங்களில், பனிப்பாறையின் பெரும் பகுதி காணாமல் போனதுடன், அதன் அடியில் இருந்த மலைப்பகுதியும் அடித்துச் செல்லப்பட்டு புதிய பாறைத் தடம் உருவாகியிருப்பது தெரிகிறது.

மேலும், சரிந்த மலையின் கீழ் நேபாளத்தில் ஒரு தடுப்பு ஏரியும், எல்லைப் பகுதியில் அதைவிடப் பெரிய மற்றொரு ஏரியும் உருவாகின. இரண்டாவது ஏரியை சீன அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

லாங்டாங் லிருங் மலைச்சரிவு ஏன் ஏற்பட்டது என்பதற்கான உறுதியான பதில் தற்போது கிடைக்கவில்லை. 'இப்போது கிடைக்கும் தகவல்களைக் கொண்டு, என்ன நடந்திருக்கலாம் என்பதை மட்டுமே கூற முடியும்' என மேற்குறிப்பிட்ட ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com