இந்தியாவில் இம்ரான் கான் 'பொம்மை' என அழைக்கப்படுகிறார் - நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு
2018 ஆம் ஆண்டு ராணுவத்தால் பதவியில் அமர்த்தப்பட்டதால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவில் "பொம்மை" தலைவர் என்று அழைக்கப்படுகிறார் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானில் இரண்டு ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட 71 வயதான நவாஸ் ஷெரீப், மருத்துவ சிகிச்சைக்காக நான்கு வாரங்கள் வெளிநாடு செல்ல லாகூர் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, நவம்பர் 2019 முதல் லண்டனில் வசித்து வருகிறார். தற்போது லண்டனில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் அவர் , வியாழக்கிழமை லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸின் (பிஎம்எல்-என்) பொதுக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய நவாஸ் ஷெரீப் ,"இந்தியாவில் இம்ரான் கானை 'பொம்மை' என்று அழைப்பார்கள், அமெரிக்காவில் அவருக்கு மேயரை விட குறைவான அதிகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணம் அவர் எப்படி ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டார் என்பது உலகம் அறிந்ததே. மக்களின் வாக்குகளால் அவர் ஆட்சிக்கு வரவில்லை, ராணுவத்தின் உதவியுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டார் " என்று கூறினார்.
மேலும் , 2018 இல் நடந்த மோசடியான பொதுத் தேர்தலின் மூலம் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்பின் கைப்பாவை அரசாங்கத்தை திணித்ததற்காக பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் ஆகியோரை ஷெரீப் கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய ஷெரீப், "2018 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் மூன்று ஆண்டுகளில், வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து 34 பில்லியனுக்கும் அதிகமான கடனை இம்ரான் கான் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. புதிய பாகிஸ்தான் என்ற பெயரில், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த இம்ரான் கான் போன்ற தகுதியற்ற மற்றும் திறமையற்றவர்கள் நாட்டின் மீது ராணுவத்தால் திணிக்கப்பட்டனர். பாகிஸ்தான் செழிப்பை நோக்கிச் செல்ல விரும்பினால் மக்களுக்கு வாக்களிப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும்" என்று கூறினார்.

