இம்ரான் கான் கைது: பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் உத்தரவு
இம்ரான் தனது கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக நிதி திரட்டியதாக அவரது கட்சியை சேர்ந்த அக்பர் எஸ் பாபர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதை தொடர்ந்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான். முன்னாள் கிரிக்கெட் வீரர் இவர். விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பாகிஸ்தானில் தனிக் கட்சி நடத்தி வருகிறார். இவரது கட்சிக்காக பல நாடுகளில் முறைகேடாக நிதி திரட்டியதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் போனது. இதையடுத்து கட்சி நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களை சமர்பிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு போட்டது. ஆனால், இம்ரான் கான் ஆவணங்கள் எதையும் சமர்பிக்கவில்லை. ஆணையத்தை அவமதிப்பு செய்ததாக கூறி விளக்கம் கேட்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையில், தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக கூறி தேர்தல் ஆணையத்தை இம்ரான் விமர்சித்தார். மேலும், இஸ்லமாபாத் உயர் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணைய அவமதிப்பு நோட்டீஸுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவின் விசாரணையை செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த இஸ்லமபாத் உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய நடவடிக்கை எதற்கும் தடை விதிக்கவில்லை. இதையடுத்து, இம்ரான் கானை கைது செய்து 25 ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.