வடகொரியாவில் வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் சிறைத் தண்டனை

வடகொரியாவில் வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் சிறைத் தண்டனை
வடகொரியாவில் வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் சிறைத் தண்டனை

உலகளவில் மக்களின் பிரபலமான பொழுதுபோக்குகளில் ஒன்று திரைப்படம் காண்பது. தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் வெளிநாட்டு மொழி படங்களை கூட நம் செல்போனிலேயே கண்டு விடலாம். ஆனால் வடகொரியாவில் இதற்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா?

வடகொரியா எனும் மர்மதேசத்தில் அரசு என்ன நினைக்கிறதோ அதை மட்டும் தான் மக்கள் செயல்படுத்த வேண்டும், இல்லையேல் மரணம் தான் மிஞ்சும். அப்படி அண்மையில் தென்கொரியா திரைப்படங்கள் அடங்கிய வீடியோக்களை விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு இளைஞருக்கு 500 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வெளியுலக தொடர்பு இல்லாமலேயே வாழும் வடகொரியா மக்கள் அவ்வப்போது சீனா எல்லை வழியே கடத்தி வரப்படும் சிடிக்கள் மூலமாக வெளிநாட்டு திரைப்படங்களை கண்டு ரசித்து வந்தனர்.

இவ்வாறு வெளிநாட்டு படங்களை காண்பதால் மக்களிடம் அதன் தாக்கம் அதிகரித்து அரசுக்கு எதிராக கேள்வி எழுப்ப தொடங்குவர் என அஞ்சுகிறது கிம் ஜாங் உன் அரசு. எனவே வெளிநாட்டு படங்களை விற்பவர்கள், பரப்புபவர்கள், காண்பவர்களை கண்டறிந்து தண்டனை வழங்கும் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதன் படி தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை சேர்ந்த திரைப்படங்களின் வீடியோக்களை கடத்தி வருவோருக்கு மரண தண்டனை என்றும், வெளிநாட்டு படங்களை காண்போருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றும் சட்டம் வகுத்துள்ளது கிம் அரசு.

இந்த சட்டத்தின் அடிப்படையில் தான் வடகொரியா அரசு, லீ என்ற இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருக்கிறது. மக்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் கிம் ஜாங் உன், அண்மையில் கட்சி இளைஞர் அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் வெளிநாட்டு மொழி பேசுவோர், வெளிநாட்டவரை போல சிகை அலங்காரம் வைத்திருப்போர், வெளிநாட்டு ஆடைகளை அணிவோர் சமூக விஷமிகள் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்றை அடுத்து சீனாவுடனான எல்லையையும் வடகொரியா அரசு மூடிவிட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

உணவு பஞ்சம் தலைவிரித்தாடுவதாக அங்கிருந்து வரும் ரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கிம் ஜாங் உன் அரசு அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் , மக்களின் அறிவு விரிவடைந்துவிட கூடாது என்பதில் கவனம் செலுத்துவது தான் வேதனை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com