\
Illegal Indian Migration to US Drops 69% From 2023 Peak
அமெரிக்கா - மெக்சிகோ எல்லைPt web

இந்தியர்களின் சட்டவிரோத அமெரிக்க குடியேற்றம்.. 69% அதிரடி சரிவு.. ட்ரம்ப் காரணமா?

2023-ஆம் ஆண்டு உச்சத்தை எட்டிய இந்தியர்களின் சட்டவிரோத அமெரிக்க குடியேற்றம், தற்போது 69 சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பின் (CBP) தரவுகள் தெரிவிக்கின்றன.
Published on

அமெரிக்கா என்ற கனவோடு, ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மெக்சிகோ மற்றும் கனடா எல்லைகள் வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக சென்று குடியேறி வருகின்றனர். கடந்த சில வருடங்களாக அதிகரித்து வந்த போக்கு தற்போது குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளது.

அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு (CBP) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2023-ஆம் ஆண்டு உச்சத்தை எட்டிய இந்தியர்களின் சட்டவிரோத அமெரிக்க குடியேற்றம் தற்போது 69 சதவீதம் குறைந்துள்ளது. 2023 நிதியாண்டில் அக்டோபர் முதல் மே வரையிலான காலகட்டத்தில், அமெரிக்க எல்லையில் இந்தியர்களுடன் தொடர்புடைய 67 ஆயிரத்து 212 சட்டவிரோத நுழைவு சம்பவங்கள் (encounters) பதிவாகியிருந்தன. ஆனால், 2026 நிதியாண்டில் 2025 அக்டோபர் முதல் 2026 மே மாதம் வரையிலான காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 614 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய சரிவாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்pt web

குறிப்பாக, மெக்சிகோவிலிருந்து தென்மேற்கு எல்லையைக் கடக்க முயன்ற இந்தியப் புலம்பெயர்ந்தோருடனான சந்திப்புகள் 99% சரிந்துள்ளன எனவும் அதே நேரத்தில் கனடாவுடனான வடக்கு எல்லையில் அவை 91% குறைந்துள்ளன எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அமெரிக்காவின் நிஸ்கானென் (Niskanen) கொள்கை ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த கில்பர்ட் குவேரா கூறுகையில், 2023-ல் உச்சத்தில் இருந்த இந்தியர்களின் சட்ட விரோத குடியேற்ற சரிவிற்கு ட்ரம்ப் அரசின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளே முக்கியக் காரணம் எனவும், அமெரிக்க எல்லைகளுக்கு வருவோருக்கு புகலிடம் கோரும் நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டதால், சட்டவிரோதமாக அமெரிக்காவை அடைய முயல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், இந்த சரிவு இருந்தபோதிலும், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியர்களின் சட்டவிரோத அமெரிக்க குடியேற்ற முயற்சிகள் இன்னும் அதிகமாகவே இருப்பதாகவும், வரும் ஆண்டுகளிலும் இந்தப் போக்கு தொடரக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், வெளிநாட்டு வேலை அல்லது குடியேற்றம் என்ற கனவை நனவாக்க, சட்டவிரோத பாதைகளைத் தவிர்த்து, சட்டப்பூர்வமான வழிகளையே தேர்வு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Illegal Indian Migration to US Drops 69% From 2023 Peak
42 நாட்களில் 100 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த IBM.. காரணம் என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com