"அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாக்குவோம்"- டொனால்டு ட்ரம்ப்
உலகில் எங்கெல்லாம் அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அங்கெல்லாம் தாக்குதல் நடத்துவோம் என்று அந்நாட்டின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஈரான் உயர்மட்ட ராணுவ தளபதி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், ஈராக்கிலுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அந்நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றது முதலே ஈரானுடன் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். 2018-ஆம் ஆண்டு ஈரானுடனான சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதனைத்தொடர்ந்து ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார் ட்ரம்ப். பொருளாதார நெருக்கடி கொடுத்து ஈரானை தனிமைப்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார். இதனால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் நீடித்தன. இந்த நிலையில் மீண்டும் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இப்படியொரு பதற்றமான சூழ்நிலையில் பேசிய அதிபர் ட்ரம்ப் " அமெரிக்கர்கள் எங்கெல்லாம் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்ற விவரங்களை ஏற்கெனவே சேகரித்து வைத்துள்ளோம். அவர்களுக்கு ஏதேனும் நேரிட்டால் அமெரிக்கா தக்க நடவடிக்கை எடுக்கும். தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அதற்கு தயக்கம் காட்டமாட்டோம். உலகிலேயே அமெரிக்க ராணுவமும், அதன் உளவு அமைப்பும்தான் மிகச் சிறந்தது" என கூறியுள்ளார்.