பியூர்டோ ரிகோவில் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மரியா புயல் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அந்த தீவின் ஒட்டுமொத்த மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதோடு, ஏராளமான வீடுகள், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதால் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்படைந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் இர்மாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய புயலாக கரீபியன் தீவுகளை மிரட்டி வந்த மரியா புயல் முதலில் டொமினிகா தீவை சின்னாபின்னமாக்கியது. தொடர்ந்து அமெரிக்காவின் விர்ஜின் தீவுகள், குடாலோப் தீவை தாக்கிய மரியா, நேற்று பியூர்டோ ரிகோவில் கோர தாண்டவம் ஆடியது. மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால் அந்தத் தீவில் இருந்த வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒட்டுமொத்த மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதில் முழு தீவும் தற்போது இருளில் மூழ்கியுள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரியா புயலின் தாக்குதலுக்கு கரிபீயன் தீவில் இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 7 பேர் டொமினிகாவிலும், 2 பேர் பிரான்சுக்கு சொந்தமான குடாலோப்பிலும் உயிரிழந்துள்ளனர். பியூர்டோ ரிகோவில் உயிர் சேதம் ஏற்பட்டதற்கான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது டொமினிக்கன் குடியரசு தீவை மரியா புயல் நெருங்கி வருவதால், அங்குள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சான்டோ டொமிங்கோவில் உள்ள விடுதிகளுக்கு பத்திரமாக அழைத்துச் செல்லப்படடுள்ளனர்.