போராலும், பசியாலும் சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கும் ஏமன்

போராலும், பசியாலும் சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கும் ஏமன்

போராலும், பசியாலும் சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கும் ஏமன்
Published on

வளைகுடா பிராந்தியத்தின் பெரும் பணக்கார நாடுகளுக்கும், ஆப்பிரிக்காவின் ஏழை நாடுகளுக்கும் மத்தியில் அமைந்திருக்கிறது ஏமன். ஒரு காலத்தில் பனிப்போரைக் கண்ட இந்த நாடு இன்று வறுமையில் சிக்கியிருக்கிறது.

ஏமனில் பள்ளிக்கு செல்ல வேண்டிய பல குழந்தைகள் உலகின் மிகக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த நோயின் பெயர் பசி. பெரும் பணக்கார இஸ்லாமிய நாடுகளால் சூழப்பட்டிருக்கும் ஏமன் நாட்டில் இது போன்ற பல்லாயிரக்கணக்கான குழந்தைகளைப் பார்க்க முடியும். உணவு, குடிநீர், மருந்துகள் இல்லாமல் நாள்தோறும் அப்பாவி மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். புதைக்க முடியாத அளவுக்கு உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. ஒரு காலத்தில் வளமான நகரங்களாக விளங்கிய சனாவும், ஏடனும் இன்று பசியைப் போக்குவதற்காக கையேந்தும் மக்களால் நிறைந்திருக்கின்றன.

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அரசுப்படைகளுக்கும் 2015 ஆம் ஆண்டு மூண்ட சண்டை சுமார் ஒரு கோடி பேரை நடுவீதிக்குக் கொண்டு வந்தது. உண்ண உணவு, பருக நீர், சிகிச்சைக்கு மருந்து, தேவைக்கு மின்சாரம் என எதுவும் இல்லாமல் பல கோடிக்கும் அதிகமானோர் வாழ்ந்து வருவதாக 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மதிப்பிடப்பட்டது. நாட்டின் 22 மாநிலங்களில் 19 மாநிலங்களில் போதுமான உணவு இல்லை என்று கூறப்பட்டது. மின் நிலையங்களில் 95 சதவிகிதம் குண்டுவீச்சில் சேதமடைந்துவிட்டதால், பல நகரங்கள் மாதக்கணக்கில் இருளிலேயே தவித்து வருகின்றன. மொத்தமுள்ள இரண்டரைக் கோடி மக்களில் இரண்டு கோடி மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் மனிதநேய உதவிகள் தேவைப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு, யுத்தம் நடத்தும் சூழல் உருவாகிறது என்றால் அதற்கு முதல் அடி எடுத்து வைப்பது வல்லரசு நாடுகளாகத்தான் இருக்கும். ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக் என பல நாடுகள் இதற்கு உதாரணங்களாக இருக்கின்றன. ஆனால் ஏமனின் குண்டு மழைகளைப் பொழிவது சவுதி அரேபியாவும், அருகே அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளும்தான். ஷியா - சன்னி பிளவால் நூற்றாண்டுகளாகப் புரையோடிப் போயிருக்கும் காயங்களே இந்த சண்டைக்கு அடிப்படை. ஷியா பிரிவைப் பின்பற்றும் ஈரானும், சன்னி பிரிவைப் பின்பற்றும் வளைகுடா நாடுகளும் ஏமனில் மறைமுகமாக யுத்தம் செய்து கொண்டிருக்கின்றன. அரபு எழுச்சியைப் பார்த்து அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தொடங்கியவர்கள், வெளிநாடுகளின் குண்டுவீச்சுகளைக் கண்டு, ஆட்சி மாற்றமே தேவையில்லை, பழைய நிர்வாகமே நீடிக்கட்டும் என்ற மனநிலைக்கு எப்போதோ வந்துவிட்டன.

ஆனால், சிதைந்து போயிருக்கும் நகரங்களையும், பலவீனமாகக் காட்சியளிக்கும் மக்களையும் பார்த்தால், மூன்றாண்டுகளுக்கு முன் இருந்த ஏமனை மீட்பது உடனடியாகச் சாத்தியமில்லை என்பது புலனாகும். சவுதி அரேபியக் கூட்டுப் படைகள் ஏமனில் சில மாதங்களுக்கு முன்புவரை குண்டுகளை வீசிக்கொண்டிருந்தன. குடியிருப்புகள், மருத்துவ முகாம்கள், உள்கட்டமைப்புகள் என பலவற்றையும் குறிவைத்துத் தாக்கியது சவுதி அரேபியா. குண்டுகளை வீசுவதற்காக நாளொன்றுக்கு 1,200 கோடி ரூபாயைச் சவுதி அரேபியா செலவு செய்ததாகவும் மதிப்பிடப்படுகிறது. ஆனால் உதவி என்று கோரும்போது பல நாடுகளும் தயங்கிக் கொண்டிருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com