32வது நாடாக நேட்டோவில் இணையும் சுவீடன்.. கடைசியாக ஒப்புதல் அளித்த ஹங்கேரி!

நேட்டோ அமைப்பில், 32வது உறுப்பு நாடாக சுவீடன் இணைய உள்ளது. ஹங்கேரி நாடாளுமன்றம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.
sweden, nato flags
sweden, nato flagstwitter

சுவீடன் நேட்டோவில் இணைய ஹங்கேரி ஒப்புதல்

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளையும் கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே கடந்த ஆண்டு பின்லாந்து நேட்டோ அமைப்பில் சேர்ந்தது. தொடர்ந்து, சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைய நேட்டோ நாடுகள் ஒப்புதல் அளித்தன. இதில் ஹங்கேரி அரசு மட்டும் நீண்டகாலமாக ஒப்புதல் அளிக்காமல் இருந்துவந்த நிலையில், தற்போது நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உள்ள நாடாளுமன்றத்தில் இதற்கான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், சுவீடன் இணைவதற்கு ஆதரவாக 188 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 6 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.

இதைத் தொடர்ந்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. முன்னதாக, கடந்த ஜனவரி (2024) 23ஆம் தேதி, நேட்டோ அமைப்பில் ஸ்வீடன் இணைவதற்கு துருக்கி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், ஆதரவு பெருகி வருவதால், நேட்டோ அமைப்பில் 32வது நாடாக சுவீடன் இணையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்லாந்தைக் கடைசியாக அங்கீகரித்த நாடுகள்:

புதிய நாடு நேட்டோ கூட்டமைப்பில் இணைய வேண்டும் என்றால், அதற்கு ஏற்கெனவே உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும். பின்லாந்து மற்றும் ஸ்வீடன் இரு நாடுகளும் நேட்டோவில் இணைய ஒரேநேரத்தில்தான் விண்ணப்பித்தன. ஆனால் துருக்கி மற்றும் ஹங்கேரி ஸ்வீடனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அது அப்படியே நின்றுபோனது. பின்லாந்தைக்கூட கடைசியாக அங்கீகரித்த நாடு இவைதான்.

கடந்த ஆண்டு, மார்ச் 27ஆம் தேதி ஹங்கேரியும், மார்ச் 30ஆம் தேதி துருக்கியும் அங்கீகரித்தன. அதன்பின்னரே, ஏப்ரல் 4 அன்று பின்லாந்து நேட்டோவில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதியும் சுவீடனும் 32வது நாடாக நேட்டோவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 4ஆம் தேதி, நேட்டோ அமைப்பு தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது. அத்துடன், இந்த ஆண்டுடன் 75வது ஆண்டையும் கொண்டாக இருக்கிறது.

நேட்டோ என்றால் என்ன? அதில் இதுவரை இணைந்துள்ள நாடுகள் எவை?

The North Atlantic Treaty Organization என்பதன் சுருக்கம்தான் NATO. அதாவது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என்பதுதான், இதன் தமிழாக்கம். சோவியத் ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பும் என்றும் சொல்லலாம். இது மேற்கத்திய நாட்டு எல்லைகளுக்கு வெளியே அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட முதல் அமைதிப்படையாக கருதப்படுகிறது. இந்த அமைப்பின் ஒப்பந்தத்தின்படி, நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது, பிற நாடுகள் போர் தொடுக்கும் பட்சத்தில், பிற நாடுகளும் உதவிக்கு வர வேண்டும் என்பதுதான் இதன் சாராம்சம். குறிப்பாக, ஐரோப்பாவில் பனிப்போர் காலத்துக்குப் பிந்தைய ரஷ்ய விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தையே இந்த அமைப்பு குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

இப்போது நேட்டோ அமைப்பில் 31 உறுப்பு நாடுகள் (அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, துருக்கி, அல்பேனியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, செ.குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மாண்டினீக்ரோ, நெதர்லாந்து, வடக்கு மாசிடோனியா, ஸ்பெயின், நார்வே, போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, பின்லாந்து) உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com