இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் கொல்லப்படும் அப்பாவி மக்கள்.. இதயத்தை நொறுங்க வைக்கும் மரண ஓலங்கள்!
தரைமட்டமாக கிடக்கின்றன கட்டடங்கள்.. தொலைதுாரத்தில் குண்டுகள் துளைத்தெடுக்கின்றன. மத்திய காசாவின் மீது நடந்த தாக்குதலின் காட்சிகள் இவை..
காசா முழுவதும் பல்வேறு ஹமாஸ் நிலைகளை குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். கட்டடங்கள் பற்றி எரிந்து புகை பரப்பிக் கொண்டிருக்கின்றன.
நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்கை ஹமாஸ் அமைப்பினர் தாக்கும் காட்சிகள்.. இவற்றை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
எங்கெங்கும் அழுகுரல்கள்.. இடிந்த கட்டடங்களில் உயிருக்குப் போராடும் மக்கள்.. சாலைகளில் பற்றி எரியும் வாகனங்கள் என போர்க்களத்தின் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியை முற்றிலும் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் Yoav Gallant உத்தரவிட்டுள்ளார்.
2 நாட்கள் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் 700 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரை சந்தித்த அவர், காசாவுக்கு மின்சாரம், உணவு, எரிபொருள் அனைத்தையும் தடை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
20 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கும் அந்த பகுதியில் அத்தியாவசியத் தேவைகளை இஸ்ரேலே வழங்கிவரும் நிலையில், இந்த தடைகள், காசா மீதான நெருக்குதலை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. காசா மீது நடத்தும் தாக்குதல்களில் 500 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 100க்கும் அதிக இஸ்ரேலியர்கள், குழந்தைகள், இளைஞர்கள் ஹமாசின் பிடியில் பிணைக் கைதிகளாக சிக்கி உள்ளனர்.
50 மணிநேரம் சண்டைக்குப்பின், காசா எல்லை நகரங்களை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள Ashkelon பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த செவிலி ஒருவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷீஜா ஆனந்த் என்ற அந்த பெண், கேரள மாநிலம் கண்ணுர் மாவட்டம் பையாவூரைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும்போது தாக்குதலுக்கு ஆளானதாக குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள். ஷீஜாவுடன் பேசும்போது ஏவுகணைத் தாக்குதல் சத்தம் கேட்டதாகவும் அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், அவரை இந்திய தூதரகத்தினர் தொடர்பு கொண்டனர். ஷீஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.