மூளையின் செயல்பாட்டை நிறுத்தி சிகிச்சை... முதல்முறையாக மனிதர்கள் மீது பரிசோதனை..!

மூளையின் செயல்பாட்டை நிறுத்தி சிகிச்சை... முதல்முறையாக மனிதர்கள் மீது பரிசோதனை..!

மூளையின் செயல்பாட்டை நிறுத்தி சிகிச்சை... முதல்முறையாக மனிதர்கள் மீது பரிசோதனை..!
Published on

அமெரிக்காவில் முதன்முறையாக ஆழ்மயக்க நிலையில் அதாவது மூளையின் செயல்பாட்டை நிறுத்தி வைத்து சிகிச்சை அளிக்கும் முறை மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து உள்ளிட்ட தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு மிகமிக ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுபவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு. அத்தகைய நபர்களை காக்கும் முயற்சியாக அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைகழகத்திலுள்ள மருத்துவர்கள் முதன்முறையாக ஆழ்மயக்க நிலையில் சிகிச்சை அளிக்கும் முறையை பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். 

மருத்துவ உலகின் இது suspended animation என அறியப்படுகிறது. மிக ஆபத்தான நிலையில் அதாவது உயிர் பிழைக்கவே 5 சதவிகித வாய்ப்புதான் உள்ளது என்ற நிலையில் இருக்கும்போது இதய துடிப்பு குறைந்து ரத்த ஓட்டமும் குறையும். ரத்தமானது செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லாதபோது, மூளைக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இந்த சிக்கலான சூழலில் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்களுக்கு கிடைப்பது மிகமிக சொற்ப நிமிடங்கள்தான்.

இப்படி ஆபத்தான நிலையில் வருவோருக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதல் நேரம் கிடைத்தால் அவர்களை பிழைக்க வைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுவர். சிகிச்சை அளிப்பதற்கான கூடுதல் நேரத்தை வழங்கவே சஸ்பெண்டட் அனிமேஷன் முறை பயன்படுத்தப்படும். பொதுவாக மனிதரின் உடல் வெப்பநிலையானது 37 டிகிரி செல்சியஸாக இருக்கும். சஸ்பெண்டட் அனிமேஷன் முறையில் உடல் வெப்பநிலையானது 10 டிகிரி செல்சியஸூக்கும் குறைவாக கொண்டு செல்லப்படும். 

பின்னர் உடலில் இருந்து ரத்தத்தை வெளியேற்றிவிடுவர். இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் பெருந்தமனியில் உறைநிலையில் உள்ள சலைன் செலுத்தப்படும். இதன் மூலம் மூளையின் செயல்பாடு கிட்டதட்ட நிறுத்தி வைக்கப்படும். இதனால் ஆக்ஸிஜன் தேவை குறைகிறது. இந்த நேரத்தை பயன்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொள்வர். சுமார் 1 மணி நேரம் வரை சிகிச்சை செய்வதற்கான அவகாசம் கிடைக்கும் என்கின்றனர் இந்தச் சோதனையில் பங்கேற்ற மருத்துவர்கள் .பின்னர் உடல் வெப்பநிலை அதிகரிக்கப்பட்டு மூளையானது பழைய செயல் நிலைக்கு கொண்டு வரப்படும். 

இதனால் அந்த நோயாளியை பிழைக்க வைக்க தேவையான சிகிச்சை அளிப்பதற்கு கூடுதல் நேரம் கிடைக்கிறது. விலங்குகளில் மட்டுமே இந்த முறை பயன்படுத்தப்பட்ட நிலையில் முதன்முறையாக மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வெற்றி அடைந்ததா என்பதை சோதனையில் பங்கேற்ற மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அடுத்த ஆண்டு இறுதியில் முடிவுகளை அறிவிப்போம் என இதில் பங்கேற்ற மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அனைத்து நேரங்களிலும் இந்த முறை கை கொடுக்காது என்றும் இவர்கள் கூறுகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com