பலூச் மக்களுக்கான போராட்டம்.. மஹ்ரங் பலோச்சுக்கு ஆயுள் தண்டனை.. பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலரும், பலோச் யக்ஜெஹ்தி கமிட்டி (BYC) அமைப்பின் தலைவருமான மஹ்ரங் பலோச் மற்றும் அவரது சக செயற்பாட்டாளர் சிப்கத்துல்லா ஷா ஆகியோருக்கு பயங்கரவாதம், தேசத்துரோகம் மற்றும் கொலைக் குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகளில் அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
பாகிஸ்தானின் காவல்துறை, ராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளால் பலூசிஸ்தான் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், கட்டாய காணாமலாக்கங்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த முக்கிய மனித உரிமை செயற்பாட்டாளர்களில் ஒருவராக மஹ்ரங் பலோச் அறியப்படுகிறார். பலூச் மக்களின் உரிமைகளுக்காகவும், காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும் அவர் நீண்ட காலமாக போராடி வருகிறார். மேலும், பலோச் யக்ஜெஹ்தி கமிட்டி (BYC) அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளில் பலூசிஸ்தானில் நடைபெற்ற போராட்டங்களுக்கு தலைமை தாங்கியதன் மூலம் சர்வதேச கவனத்தையும் பெற்றார்.
இந்தசூழலில் தான், 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பலூசிஸ்தானின் குவெட்டா நகரில் பலோச் யக்ஜெஹ்தி கமிட்டி (BYC) தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, துணை ராணுவப் படை வீரரான ஷப்பிர் பலோச் உயிரிழந்தார். போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படை வாகனத்தைத் தாக்கி, அந்த வீரரை அடித்துக் கொன்றதாக அரசு தரப்பு குற்றம்சாட்டியது. இந்த வன்முறையைத் தூண்டியதாக மஹ்ரங் பலோச் மற்றும் சிப்கத்துல்லா ஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் மீது பயங்கரவாதம், தேசத்துரோகம் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, 2025 மார்ச் மாதத்தில் பொது ஒழுங்கு பராமரிப்பு அவசரச் சட்டத்தின் கீழ்மஹ்ரங் பலோச் மற்றும் சிப்கத்துல்லா ஷா கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு பாகிஸ்தான், பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், இன்று அந்நீதிமன்றம், போராட்டக்காரர்களை தூண்டிவிட்டு வன்முறைக்கு காரணமானதாகக் கூறி மஹ்ரங் பலோச் மற்றும் சிப்கத்துல்லா ஷாவுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பு பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்திலும் மனித உரிமை அமைப்புகளிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மஹ்ரங் பலோச் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. தாங்கள் எப்போதும் அமைதியான முறையிலான போராட்டங்களையே முன்னெடுத்ததாகவும், அரசை விமர்சித்ததற்காக பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தசூழல், மஹ்ரங் பலோச்சுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, பாகிஸ்தானில் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் சுதந்திரம், பலூச் மக்களின் உரிமைகள் மற்றும் நீதித்துறையின் செயல்பாடு குறித்து சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.

