1966-ல் ஏர் இந்தியா விமான விபத்து: உடல்பாகம் இப்போது கண்டுபிடிப்பு!
1966-ம் ஆண்டில் விமான விபத்தில் இறந்தவர்களின் உடல் பகுதிகள் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
1966-ம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 117 பயணியருடன் ஏர் - இந்தியாவின் போயிங் 707 விமானம் சென்றுகொண்டிருந்தது. அப்போது பிரான்சின் ஆல்ப்ஸ் மலையிலுள்ள மான்ட் பிளாங்க் அருகே சென்ற போது விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்த 117 பேரும் இறந்தனர். அவர்கள் உடல்கள் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், விமான விபத்துகளைப் பற்றி ஆய்வு செய்யும் டேனியல் ரோச் என்பவர், ஆல்ப்ஸ் மலையில் பிளான்க் பகுதியில் ஆய்வு நடத்தினார். இதில், ஒரு மனித கை மற்றும் கால் பகுதிகள் கிடப்பதை கண்டுபிடித்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘பிளான்க் பகுதியில் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறேன். இதுவரை எந்த மனித உடல் உறுப்புகளையும் பார்த்ததில்லை. ஆனால், இப்போது, ஒரு கை மற்றும் காலின் மேல் பகுதி கிடைத்துள்ளது. உடைந்த விமான இன்ஜின் ஒன்றும் கிடைத்துள்ளது. இது, 1966-ல் விபத்துக்குள்ளான, ஏர் - இந்தியா விமானத்தில் இறந்தவர்களின் உடல் பாகங்களாக இருக்கலாமென நினைக்கிறேன். கண்டுபிடிக்கப்பட்டது பெண் ஒருவரின் உடல் பாகம்’ எனத் தெரிவித்துள்ளார்.