நேபாள விமான விபத்துக்கு மனித தவறே காரணம்? - முதற்கட்ட ஆய்வறிக்கை சொல்வது என்ன?

நேபாள விமான விபத்துக்கு மனித தவறே காரணம்? - முதற்கட்ட ஆய்வறிக்கை சொல்வது என்ன?
நேபாள விமான விபத்துக்கு மனித தவறே காரணம்? -  முதற்கட்ட ஆய்வறிக்கை சொல்வது என்ன?

நேபாள விமான விபத்து நடந்ததற்கு மனித தவறுகள் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.

நேபாளத்தில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 72 பேர் உயிரிழந்தனர். 72 பேரில் 71 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒருவரின் சடலம் மட்டும் கிடைக்கவில்லை. இருப்பினும் அவரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

விபத்தை தொடர்ந்து விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விமான விபத்துக்கு விமானத்தின் இரு என்ஜின்களும் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜின் கோளாறு ஏற்பட்டதற்கு காரணம் விமானியின் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்த விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து 5 பேர் கொண்ட விசாரணை குழு புதிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதாவது, இந்த விபத்தில் மனித தவறு இருப்பதற்கான காரணியை மறுக்க முடியாது என ஐந்து பேரில் ஒருவர் தெரிவித்து உள்ளார். இது சுற்றுலா அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 14 பக்க முதற்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏர் டிராஃபிக் கன்ட்ரோலர் 10:57 மணிக்கு தரையிறங்குவதற்கான அனுமதியை வழங்கியபோது, பைலட் ப்ளையிங் இன்ஜின்களில் இருந்து மின்சாரம் வரவில்லை என்று கேப்டன் இரண்டு முறை குறிப்பிட்டதாக அறிக்கை மேலும் கூறுகிறது. விரிவான அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அதற்கு முன் என்ன நடந்தது என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியாது" என்று விசாரணைக் குழு உறுப்பினர் ஒருவர் கூறினார். விபத்துக்குள்ளான விமானத்தின் தகுதிச் சான்றிதழ் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் விதிமுறைப்படி, விமான விபத்து நிகழ்ந்தால் விபத்து நடந்த 30 நாட்களுக்குள் முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். விபத்து நடந்த 12 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

தவற விடாதீர்: `72 உயிர்களை பறித்த நேபாள விமான விபத்துக்கு இதுதான் காரணம்’- விசாரணைக்குழு தகவல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com