ஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை

ஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை

ஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை
Published on

ஹூவாய் நிறுவன உயரதிகாரியை கைது செய்த கனடாவுக்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக விடுதலை செய்யாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வாங்சோவை, கடந்த 1 ஆம் தேதி கனடா அரசு தடுப்புக் காவலில் கைது செய்தது. ஈரான் மீது அமெரிக்கா விதித்த தடைகளை மீறி, ஹுவாய் நிறுவனம் உதவி செய்ததற்காக, அவரை கனடா கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மெங்கை தங்களிடம் ஒப்படைக்குமாறு கனடா அரசிடம், அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. 

இந்நிலையில், மெங்கை கைது செய்திருப்பது மனித உரிமை மீறல் என சீனா கண்டித்துள்ளது. மேலும், தனது நாட்டில் உள்ள கனடா மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை அழைத்து மெங்கை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. மெங்குக்கு எதிராக அமெரிக்கா பிறப்பித்த கைது வாரண்டையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

ஹுவாய் நிறுவனத்தின் மெங் யார்?

ஹுவாய் நிறுவனத்தின் நிறுவனர் ரென் ஜாங்ஃபெய்யின் மகள்தான் இந்த மெங். 1992 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்ததும், தந்தையின் சுமையை குறைப்பதற்காக நிறுவனத்தில் முக்கிய பொறுப்பை மெங் ஏற்றுக் கொண்டார். இவரது சகோதரர்கள் மெங் பிங், ரென் பிங்கும் ஹுவாய் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பு வகித்து வருகின்றனர். மெங்கின் அதிரடி நடவடிக்கையால், நிறுவன பங்குகள் சீனாவில் உச்ச நிலையை அடைந்தன.

நிறுவனத்தை மெங் உயர்த்தினாலும், ஊடகங்களில் அதிகமாக அவர் தலைகாட்டியதில்லை. 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக சீன ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார் மெங். அதில், தமக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாகவும், கணவர் தமது நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்றும் தெரிவித்திருந்தார். ஹுவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக உயர்வதற்கு முன், அந்நிறு‌வனத்தின் வரவேற்பாளராக, செயல் அதிகாரியாக என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்திருக்கிறார் மெங்.

ஈரானுக்கு உதவியதால் மெங் கைது

சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஹுவாய் நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதற்கு மெங்கின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பணியில் சேர்ந்தது முதல், ஏற்றத்தை சந்தித்து வந்த மெங்குக்கு, தற்போது அமெரிக்காவால் முதல் முறையாக சரிவு ஏற்பட்டிருக்கிறது. 

ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்தபோது, அதை மீறி அந்நாட்டுக்கு உதவியிருக்கிறார் மெங். இதைத் தெரிந்து கொண்ட அமெரிக்கா, அவர் எந்த நாட்டுக்கு சென்றாலும் கைது செய்யப் போவதாக எச்சரித்திருந்தது. அதன்படியே அண்மையில் கனடா சென்றிருந்த மெங் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதற்கு அமெரிக்கா பிறப்பித்த கைது உத்தரவுதான் காரணமாக கூறப்படுகிறது. அந்த உத்தரவை அமெரிக்கா வாபஸ் பெற்றுக் கொண்டால் மட்டுமே, அவரை விடுவிப்பதற்கான நடைமுறைகளை கனடாவால் தொடங்க முடியும் என வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சீன, அமெரிக்க வர்த்தக உறவில் ஏற்கெனவே புகைச்சல் இருந்து வரும் சூழலில், மெங்கின் கைது நடவடிக்கை காரணமாக மீண்டும் இரு நாட்டுக்கு இடையிலான வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com