கிம் ஜாங் உன் பற்றிய வதந்தி பரவியது எப்படி?

கிம் ஜாங் உன் பற்றிய வதந்தி பரவியது எப்படி?
கிம் ஜாங் உன் பற்றிய வதந்தி பரவியது எப்படி?

வடகொரியா பற்றி அவ்வப்போது முரண்பட்ட தகவல்களும், வதந்திகளும் வெளியாவதுண்டு. ‌கிம் பற்றி அண்மையில் வெளியான தகவலும் அவற்றில் ஒன்றுதான். இது எப்படி நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.

உலகிலேயே வதந்திகள் அதிகமாக பிறப்பது எங்கேயென்று கேட்டால், சமகாலத்தில் அது வடகொரியா என்று உறுதியாகக் கூறலாம். கட்டுப்பாடடற்ற ஊடகங்கள் இல்லாததும், வெளிநாட்டினர் வெளிப்படையாக அனுமதிக்கப்படாததும், முரண்பாடான பழக்க வழங்கங்களுமே இதற்குக்குக் காரணம். கிம் ஜாங் உன் காணாமல் போனதாகக் கூறப்பட்டதும், இறந்து போயிருக்கலாம் என்று தகவல் வெளியானதும் வதந்திகளைப் போன்றவைதான். ஆனால் ஊடகங்கள் இதைச் செய்திகளாக்கியதற்குக் காரணங்கள் உண்டு.

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி வடகொரியாவை உருவாக்கியவரும், கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் இல் சுங்கின் பிறந்தநாள். அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான விழாக்களில் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. அதுவே கிம் ஜாங் உன் குறித்து வந்த செய்திகளின் தொடக்கப்புள்ளி. இதன் பிறகுதான் வடகொரியாவில் ஏதோ நடக்கிறது என்று தகவல்கள் பரவின. வடகொரியாவில் இருந்து தப்பி வந்தவர்கள் நடத்தும் டெய்லி என்.கே. என்ற இணையதளத்தில், கிம்முக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்ததாகச் செய்தி வெளியானது.

 அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கிம் படிப்படியாகக் குணமடைந்து வருவதாகவும் அந்த இணையதளம் கூறியது. இந்த இரண்டு தகவல்களையும் கொண்டு, அமெரிக்க அதிகாரிகள் சிலர் கிம் ஜாங் உன் கவலைக்கிடமாக இருப்பதாகச் தகவல்களைக் கசியவிடத் தொடங்கினர். இது சிஎன்என் போன்ற முக்கிய ஊடகங்களில் வெளியாகவே உலகம் முழுவதும் பரவியது.

வடகொரியாவில் இருந்து அடக்குமுறைக்குப் பயந்த சிலர் அவ்வப்போது தப்பி வருவார்கள். அவர்கள் மூலமாகவே, அந்நாடு பற்றி தகவல்கள் வெளியே வரும். அடுத்ததாக தென்கொரியாவின் உளவுத் துறை மூலம் தகவல்கள் கிடைக்கும். இவை தவிர பல நாடுகளின் செயற்கைக் கோள்கள் மூலமாகவும் வடகொரியா கண்காணிக்கப்பட்டு வருகிறது. வடகொரியாவில் இருந்து ஒரு தகவல் வருகிறதென்றால், உடனடியாக தென்கொரியாவிடம்தான் அது குறித்து விசாரிக்கப்படும்.

பின்னர் அமெரிக்காவின் உளவு விமானங்கள், செயற்கோள்கள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மூலம் அது உறுதி செய்யப்படும். கடந்த சில வாரங்களாக கிம் பொதுவெளியில் தோன்றாத நிலையில், அமெரிக்க அதிகாரிகளின் அளித்த தகவல்கள் மூலமாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. கிம்மை சில காலமாக அமெரிக்காவால் பார்க்க முடியவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவும் கூறவிட, வதந்திகள் செய்திகளாக மாறிவிட்டன. தென்கொரியா ஆணித்தரமாக மறுத்தபோதும், அமெரிக்க ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வெளியானது. இப்போது கிம் ஜாங் உன் பங்கேற்ற பொது நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இதுவும்கூட தற்காலிகமானதுதான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com