சீன மக்கள் விரைவில் மீண்டுவந்தது எப்படி? - இந்தியா திரும்பிய மாணவி கருத்து
சீனாவின் மக்கள் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர அச்சமும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுமே காரணம் என அந்நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவி தெரிவித்துள்ளார்.
திருச்சி அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிருபமா தேவி. சீனாவின் ஜின் ஜியாங்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில்வதற்காக கடந்த ஜனவரி 9ஆம் தேதி திருச்சியிலிருந்து புறப்பட்டார். அங்கு சென்ற ஓரிரு வாரங்களிலேயே கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. அதனால் கல்லூரியில் பாடங்கள் ரத்து செய்யப்பட்டாலும், அங்கிருந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் விடுதியிலேயே அரசு செய்து கொடுத்திருந்ததாக நிருபமா கூறுகிறார்.
இதுகுறித்து நிருபமா தேவி கூறுகையில், “சீனாவில் மக்கள் எங்கு சென்றாலும் அங்கு அவர்களுக்கு தடையின்றி கிருமிநாசினிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததே கொரோனா பரவலை கட்டுப்படுத்த மிகவும் உதவியுள்ளது. கொரோனாவின் மையப்புள்ளியாக இருந்த வூகானில் என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ, அதே பாதுகாப்பு ஏற்பாடுகள் தான் சீனாவின் பிற பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது”என்றார்.
இந்தியாவில் போதிய விழிப்புணர்வோடு மக்கள் இருந்தால் எளிதில் அதனை வென்றுவிடலாம் என்பதே கொரோனாவின் தொடக்கப்புள்ளியான சீனாவிலிருந்து திரும்பிய இந்த மருத்துவ மாணவியின் நம்பிக்கை.