குறைந்த வேலைநேரத்தால் உற்பத்தி திறன் அதிகரிப்பா? - ஐரோப்பிய நாடுகளில் நடப்பது என்ன?

ஐரோப்பிய நாடுகளில் குறைவான வேலை நேரம் அதிகமான திறனையும் உற்பத்திக்கு உத்தரவாதமும் தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
Working hours
Working hours Pixabay

மகிழ்ச்சி, பொறுப்புடன் வேலை பார்ப்பது மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிப்பு... ஒவ்வொரு தொழிற்சாலையும் ஒவ்வொரு நிறுவனமும் தமது ஊழியர்களிடம் எதிர்பார்க்கும் குணம் இவைதான். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலை செய்வது குறித்த விவாதம் மேலெழுந்தது. ‘அதே வேலைச்சுமை, அதே சம்பளம்... ஆனால் நான்கு நாட்கள் வேலை, மூன்று நாட்கள் ஓய்வு’ என்பதுதான் திட்டம்.

4 நாட்கள் வேலையும் 3 நாட்கள் விடுமுறையும்

நியூசிலாந்தில் செய்யப்பட்ட ஆய்வொன்றில் வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலையும் மூன்று நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் 20 சதவீதம் உற்பத்தி கூடியதும் ஊழியர்களிடம் மகிழ்ச்சி அதிகரித்ததையும் உணர முடிந்திருக்கிறது. உலகத்திலேயே அதிகமான வேலை நேரம் உள்ள தென் கொரியாவிலும், ஜப்பானிலும் உற்பத்தித்திறன் குறைவு. இதனால் ஜப்பானில் அதிக வேலை நேரங்களில் வெகுகாலம் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் நிரந்தர அசதி, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கும் உள்ளானது தெரிந்ததால் வேலை நேரத்தைக் குறைக்கும் முயற்சிகள் பரிசீலிக்கப்படுகின்றன.

Working hours
Working hours Pixabay

6 மணிநேரம் மட்டுமே வேலை

சுவீடனிலும், ஐஸ்லாந்திலும் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரமே வேலை கொடுத்து உற்பத்தித் திறனும் ஊழியர்களின் மகிழ்ச்சியும் அதிகரிக்கிறதா என்று பார்க்கப்பட்டது. உற்பத்தியில் மட்டுமல்ல; குடும்ப வாழ்க்கையிலும் அவர்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் இந்த வேலைநேரக் குறைப்பு உருவாக்கியுள்ளது.

வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும்

பெல்ஜியம் நாட்டில் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் நான்கு நாட்கள் வேலை நேரம் அமல்படுத்தப்பட்டது. இங்கிலாந்தில் ஆறுமாத சோதனை ஓட்டமாக நடந்த நான்கு நாட்கள் வேலைத் திட்டம் முழுமையான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. 80 சதவீதமாக குறைக்கப்பட்ட வேலை நேரம் 100 சதவீதம் உற்பத்தி, 100 சதவீதம் சம்பளம் என்பது நடைமுறையாகத் தொடங்கியுள்ளது இங்கிலாந்தில்.

Working hours
Working hours Pixabay

மகிழ்ச்சியும் உற்பத்தி திறனும் அதிகரிப்பு

ஸ்காட்லாந்திலும் வேல்ஸிலும் இந்த நான்கு நாள் சோதனையை நடத்துவதற்கான பரிசீலனை நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் நாட்டில் கடந்த ஆண்டு இதன் சோதனை ஓட்டம் டிசம்பரில் தொடங்கியது. ஐஸ்லாந்தில் பெருந்தொற்று காலத்துக்கு முன்னேயே வாரத்துக்கு 35 முதல் 36 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது ஐஸ்லாந்தில் 90 சதவீதம் தொழிலாளர்கள் குறைக்கப்பட்ட வேலையில் மகிழ்ச்சியாகவும் நல்ல உற்பத்தியை அளிப்பவர்களாகவும் உள்ளனர்.

ஸ்வீடனில் நான்கு நாள் வேலை நேரம் சில வேலைச் சூழல்களில் நேர்மறையான தாக்கங்களையும், சில வேலைச் சூழல்களில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவிலேயே குறைந்த வேலை நேரத்தை ஏற்கெனவே கொண்டிருக்கும் நாடு ஜெர்மனி ஆகும். இதன் வார வேலை நேரம் சராசரி 34.2 மணி நேரமாகும். அமெரிக்காவிலும் கனடாவிலும் பெரும்பாலான தொழிலாளர்கள் நான்கு நாள் வேலைத் திட்டத்துக்கு ஆதரவாக உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com