
1987-ல் சுதந்திர பாலஸ்தீனம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தோன்றிய இயக்கம்தான் ஹமாஸ். அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களிடம் செல்வாக்கு பெற்றது ஹமாஸ் இயக்கம். 51 கிலோ மீட்டர் நீளமும் 21 கிலோமீட்டர் அகலமும் கொண்ட சிறிய செவ்வக வடிவ காஸா பகுதியில், இஸ்ரேலின் ராணுவத்தை மீறியும் அதன் உளவு அமைப்பான மொஸாட்டின் கண்களின் மண்ணை தூவியும் இயக்கத்தை செழிப்புடன் வழிநடத்த ஹமாஸ் கொண்ட திட்டம்தான் சுரங்கப்பாதை வலை அமைப்பு.
இஸ்ரேலின் கூற்றின்படி ஹமாஸ் அமைப்பினர் காஸா பகுதியில் 60 மைல் தூரத்திற்கு சுரங்கப்பாதைகள் அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2007ஆம் ஆண்டு முதல் இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலின் விமானப்படைக்கு சவால் விடும் வகையில் பதுங்கு குழிகளையும் சுரங்கப்பாதை வலையமைப்புகளையும் தோண்டி அதன்மூலம் பல்வேறு காரியங்களை சாதித்துள்ளனர்.
ஆயுதக் கிடங்குகளுக்காகவும், ஆயுதங்களை பரிவர்த்தனை செய்வதற்காகவும் சுரங்கப்பாதையை ஹமாஸ் அமைப்பினர் உருவாக்கினர். 2015 ஆண்டுவாக்கில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களுக்கு ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட சுரங்கப்பாதையாவது சொந்தமாக இருக்க வேண்டும் என்கிற அளவிற்கு பாதாள உலகத்தில் மீது ஹமாஸ் அமைப்பினருக்கு ஆசை அதிகரித்தது.
எகிப்திலிருந்து காசா வரை ரஃபா நகர் வழியாக செல்லும் சுரங்கப்பாதை ஹமாஸின் சுரங்க பாதைகளில் மிகவும் நீளமானது. பொதுவாக 40 அடி அகலத்திற்கு கான்கிரீட் சுவர்களால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கத்தை வழித்தடமாக மட்டுமின்றி வாழ்விடமாகவும் பயன்படுத்தியுள்ளனர் ஹமாஸ் அமைப்பினர்.
இந்நிலையில்தான் இஸ்ரேல் ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பின் விழுதுகளை ஒவ்வொன்றாக சாய்த்து வரும் இஸ்ரேல், தற்போது ஹமாஸ் அமைப்பின் பலமாக கருதப்படும் சுரங்கப்பாதை மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்றிலிருந்து சுரங்கப்பாதை இருக்கும் பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஹமாஸின் ஆயுதக் கிடங்குகளையும் சுரங்கப் பாதைகளையும் முற்றிலும் அழிப்பதே தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸின் பாதாள உலக வலைய அமைப்பு அவர்களுக்கு மட்டுமே தெரிந்தது என்பதால் இஸ்ரேலால் அனைத்து சுரங்க பாதைகளையும் உடனடியாக அழித்து விட முடியுமா என்பது கேள்விக் குறிதான்.