\
Houthis Strike Hard as Saudi Arabia Loses US Support?
americaani

அடித்து ஆடும் ஹவுதிகள்.. உதவியின்றித் தவிக்கும் சவூதி.. ஒதுங்கிக் கொண்ட அமெரிக்கா?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு ஏன் சவூதி அரேபியாவுக்கு நேரடி ராணுவ உதவி வழங்கத் தயங்குகிறது என்ற கேள்வி எழுந்து, பேசுபொருளாகியுள்ளது.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிப் படையினரின் தொடர் தாக்குதல்களால் சவூதி அரேபியா கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அந்நாட்டின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதலில் பலர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதனால், தனது பாதுகாப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சவூதி அரேபியா உள்ளது.

saudi
saudi reuters

அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் பல ஆண்டுகளாக நெருங்கிய பாதுகாப்புக் கூட்டாளிகளாக இருந்து வருகின்றன. குறிப்பாக, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாப்பதிலும், எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்துவதிலும் சவூதி அரேபியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இத்தகைய சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு ஏன் சவூதி அரேபியாவுக்கு நேரடி ராணுவ உதவி வழங்கத் தயங்குகிறது என்ற கேள்வி எழுந்து, பேசுபொருளாகியுள்ளது.

முதல் காரணமாகச் சொல்லப்படுவது அமெரிக்காவின் மாறிவரும் வெளியுறவுக் கொள்கை!

1945-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவு படிப்படியாக வலுப்பெற்று வந்துள்ளது. எண்ணெய் விநியோகத்தில் ஒத்துழைப்பதும், சவூதி அரேபியாவின் பாதுகாப்புக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் இந்த உறவின் முக்கிய அம்சங்களாக இருந்து வந்துள்ளன. ஈரானில் 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புக் கூட்டுறவு மேலும் வலுப்பெற்றது. ஆனால், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

TRUMP
TRUMPANI

கடந்தகால நிகழ்வுகள், அமெரிக்காவின் ஆதரவை முழுமையாக நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை அதன் கூட்டாளிகளுக்கு உணர்த்தியுள்ளன. தற்போது ட்ரம்ப் அரசும் அமெரிக்காவின் நேரடி ராணுவத் தலையீட்டைத் தனது தேசிய நலன்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறது. இதனால், சவூதி அரேபியா எதிர்கொள்ளும் ஒவ்வோர் அச்சுறுத்தலுக்கும் அமெரிக்கா நேரடியாகப் போரில் இறங்கும் என்று எதிர்பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

Houthis Strike Hard as Saudi Arabia Loses US Support?
நண்பனுக்கு உதவி செய்யாத பாகிஸ்தான்..? அதிர்ந்து நிற்கும் சவூதி அரேபியா!

இரண்டாவது காரணமாகச் சொல்லப்படுவது, அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்னைகளும் தேர்தல் கணக்குகளும்!

அமெரிக்காவில் பணவீக்கம், பெட்ரோல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இத்தகைய சூழலில், மத்திய கிழக்கில் மேலும் ஒரு ராணுவ மோதலில் அமெரிக்கா ஈடுபடுவது உள்நாட்டில் அரசியல் ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

ஏற்கெனவே ஈரானுடனான மோதல் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், ஹவுதிகளுக்கு எதிராகவும் நேரடி ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், அமெரிக்காவின் செலவுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அமெரிக்க மக்களின் வரிப்பணம் வெளிநாட்டுப் போர்களுக்காகச் செலவிடப்படுவதாக விமர்சனங்கள் எழலாம். தேர்தல் அரசியலைக் கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ட்ரம்ப் அரசு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Houthi
HouthiReuters

மூன்றாவது காரணமாகச் சொல்லப்படுவது ட்ரம்பின் முடிவுகளைக் கணிக்க முடியாத நிலை!

சவூதி அரேபியா நீண்டகாலமாக அமெரிக்காவுடனான ராணுவக் கூட்டுறவையே தனது பாதுகாப்பின் முக்கியத் தூணாகக் கருதி வந்துள்ளது. ஹவுதிகளுக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவூதி அரேபியா வலியுறுத்தியதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், ட்ரம்ப் அரசு உடனடியாக ராணுவத் தலையீட்டுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, ஹவுதிகளுடனான மோதலைக் கட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் பிற வழிமுறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா சவூதி அரேபியாவுக்கு உளவுத் தகவல்கள் உள்ளிட்ட ஆதரவுகளை வழங்கி வந்தாலும், நேரடி ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து தெளிவான உறுதிப்பாட்டை அளிக்காதது அந்நாட்டுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Houthis Strike Hard as Saudi Arabia Loses US Support?
ஹவுதிகளால் நடுங்கும் சவூதி.. பதுங்குக்குழி அரண்மனைக்குள் பாதுகாக்கப்படும் இளவரசர்!?

நான்காவது காரணமாகச் சொல்லப்படுவது ஹவுதிகளுக்கு எதிரான போர் எளிதானதல்ல என்பதே!

ஏமனைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஹவுதி கிளர்ச்சிப் படையினர், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தொலைதூர இலக்குகளைக் குறிவைக்கும் திறனைக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமே தாக்குதல்களை முழுமையாக நிறுத்துவதற்குப் போதுமானதாக இருக்காது என்ற மதிப்பீடும் அமெரிக்காவின் தயக்கத்துக்குப் பின்னால் உள்ளது.

Saudi Arabia
Saudi Arabia reuters

கடந்த காலங்களில் ஹவுதிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதிலும், அவர்களின் தாக்குதல் திறனை முழுமையாக முடக்குவது கடினமானதாகவே இருந்து வந்துள்ளது. எனவே, மீண்டும் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அது எதிர்பார்த்த பலனைத் தருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.மேலும், இந்த மோதல் விரிவடைந்தால் ஈரானுடனான பதற்றம் அதிகரிப்பதுடன், செங்கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணை உள்ளிட்ட முக்கியக் கடல்வழிப் பாதைகளிலும் பாதிப்புகள் ஏற்படலாம். இதனால், ஒரு பிராந்தியப் பிரச்னையாகத் தொடங்கிய மோதல், சர்வதேச அளவிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடியாக மாறக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

அமெரிக்காவின் ஆதரவு எந்த அளவுக்கு உறுதியாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சவூதி அரேபியா தனது பாதுகாப்பு உறவுகளைப் பல்வகைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. எகிப்து, துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதே நேரத்தில், பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளிடமிருந்தும் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

Houthis Strike Hard as Saudi Arabia Loses US Support?
எண்ணெய் விநியோகம் முற்றிலும் பாதிப்பு.. தொடரும் ஹவுதிகளின் ஆதிக்கம்.. மாற்று வழியில் சவூதி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com