ஹிஜாப்பின்றி போட்டியில் பங்கேற்ற ஈரானிய வீராங்கனை வீடு தரைமட்டம்... வீதியில் பதக்கங்கள்!

ஹிஜாப்பின்றி போட்டியில் பங்கேற்ற ஈரானிய வீராங்கனை வீடு தரைமட்டம்... வீதியில் பதக்கங்கள்!
ஹிஜாப்பின்றி போட்டியில் பங்கேற்ற ஈரானிய வீராங்கனை வீடு தரைமட்டம்... வீதியில் பதக்கங்கள்!

ஈரானில் ஹிஜாப் அணியாமல் தடை ஏறுதல் போட்டியில் பங்குகொண்ட வீராங்கனை எல்னாஸ்சின் வீடு அரசால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இது ஈரானிய அரசின் நடவடிக்கையா என்ற அந்நாட்டு மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் ஈரானில் 22 வயதான மஹ்சா அமினி என்ற பெண், கட்டாய ஹிஜாப் சட்டத்துக்கு உட்படாமல் இருந்ததற்காக அந்நாட்டு காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டு, மர்மமான முறையில் மரணத்தது உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பை ஈரான் அரசுக்கு எதிராக பெற்றுக்கொடுத்தது. அப்பெண்ணை ஈரானிய அறநெறி காவலர்கள்தான் துன்புறுத்தி கொலை செய்ததாக வெளியான செய்திகள், இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி தொடர்ந்து ஈரானில் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் பரவியது.

அப்படியான சூழலில்தான் தனது ஹிஜாப்-ஐ சரியாக அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் அறநெறி காவல்துறையின் கண்களில் பட்டார் வீராங்கனை எல்னாஸ் ரெகாபி (33) என்ற பெண். இவர், ஹிஜாப் இல்லாமல் கடந்த அக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடந்த தடையேறுதல் போட்டியில் பங்கேற்றிருந்தார்.

சியோல் நகரில் நடைபெற்ற விளையாட்டு போட்டியின்போது, எல்னாஸ் தனது தலைமுடியை போனிடெயிலாக போட்டுக்கொள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி சர்வதேச அளவில் பேசுபொருளாக உருவானது. போட்டி முடிந்த அவர் ஈரானுக்குத் திரும்பியதும், தெஹ்ரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தில் "எல்னாஸ் தி ஹீரோ" என்று கோஷமிட்டு மக்கள் அவரை வரவேற்ற காட்சிகளும் சமூகவலைதளங்களில் வீடியோக்களாக வெளியாகின.

எல்னாஸின் ஹிஜாப் அணியாத போக்கை, சில ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய எழுச்சியின் அடையாளமாகப் பார்த்தார்கள். பெண்களுக்கு அதிக சுதந்திரம் வேண்டும் என்று எல்னாஸை முன்னிறுத்தி கூறி போராடினர். இருப்பினும், அவர் தெஹ்ரானுக்குத் திரும்பியபோது மனித உரிமைக் குழுக்கள் அவரது பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்தன.

அப்படியான சூழலில் ஈரான் திரும்பிய எல்னாஸ், தான் ஈரான் வந்தடைந்த அந்த வாரத்தின் பிற்பகுதியில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் எழுதினார், “உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்" என்றார். அதேநேரம், தான் தற்செயலாகவே ஹிஜாப்பின்றி விளையாடியதாகவும், இதில் உள்நோக்கமில்லை என்றும் அவர் தெரிவித்தார். அவரது அக்கருத்து, அரசின் அழுத்தம் காரணமாக அவர் சொன்னதாக இருக்குமென்று பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில் மனித உரிமை குழுக்கள் அச்சம் தெரிவித்தது போலவே தற்போது எல்னாஸூக்கு ஈரானில் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஈரானிய ஊடகத்திலிருந்து பெறப்பட்ட காட்சிகளின்படி, எல்னாஸின் வீடு அழிக்கப்பட்டுள்ளது, மேலும் அவரது பதக்கங்களும் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதன் பின்னணியாக, எல்னாஸின் வீடு உரிய அனுமதியின்றி அப்பகுதியில் கட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவின்படி, அதை படம்பிடிக்கும் நபர் வீட்டிற்கு என்ன நடந்தது என்பதை விவரிக்கையில் அங்கு எல்னாஸின் சகோதரர் தாவூத் அழும் காட்சிகளும் இருக்கின்றன. தாவூத்தும், தடை ஏறும் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ எடுக்கும் நபர், “இதுதான் இந்த நாட்டில் வாழ்வோருக்கு ஏற்படும் நிலைமை. இந்த நாட்டுக்காக கிலோ கணக்கில் பதக்கங்களை கொண்டு வந்த ஒருவர்... இந்த நாட்டை பெருமை பட வைக்க கடுமையாக உழைத்த ஒருவர்.... அவரது 39 சதுர அடியுள்ள வீட்டை இடித்துள்ளனர். இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது” என்றுள்ளார். இந்த வீடு இடிப்பு சம்பவம் எப்போது நடந்தது என்று தெரியவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சி.என்.என் தரவுகளின்படி, எலாஸின் வீடு அரசின் ஆணையின்கீழ்தான் இடிக்கப்பட்டதா என்பது உறுதியாக தெரியவில்லை. அதிகாரிகளோ அல்லது அரசு சார்ந்த ஊடகங்களோ இதுகுறித்து பகிரங்கமாக கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஈரானின் Tasnim என்ற செய்தி நிறுவனம், “எல்னாஸின் வீடு இடிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் எல்னாஸின் குடும்பத்தினர் வீடு கட்டுவதற்கான சரியான அனுமதியை பெறாமல் இருந்துள்ளனர். மேலும் எல்னாஸ் குறிப்பிட்ட அப்போட்டியில் ஹிஜாப் இன்றி விளையாடுவதர்கு முன்பே, இந்த வீடு இடிப்பு சம்பவம் நடந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளது.

கடந்த இரு மாதங்களாகவே ஈரானில் இந்த கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான மிக வலுவான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றுதான் ஈரான் அரசு முதல் முறையாக பணிந்தது. அதன்படி, பொது வெளியில் ஹிஜாப் அணிவதை உறுதிப்படுத்தும் அறநெறி காவல்துறை பிரிவை ஈரான் அரசு கலைத்தது. ஆனால் அவை நிரந்தரமாக கலைக்கப்பட்டதா இல்லை தற்காலிகமானதா என ஈரான் அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போத் எல்னாஸ் வீடு இடிக்கப்பட்ட செய்தி வெளியாகியிருப்பது, அம்மக்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com