அமெரிக்கா - இந்தியா இடையில் ஹாட்லைன் வசதி தொடரும்
ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவடைந்த பிறகும் அமெரிக்க அதிபர் - இந்திய பிரதமர் இடையிலான ஹாட்லைன் எனப்படும் நேரடி தொலைபேசி வசதி தொடரும் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் மற்ற நாடுகளின் பிரதமர்களுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொள்ள ஹாட்லைன் எனப்படும் வசதி நடைமுறையில் இருந்து வந்தது. ரஷ்யா, பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்திய பிரதமருடனும் அமெரிக்க அதிபர் நேரடியாக தொலைபேசியில் பேச ஹாட்லைன் வசதி கடந்த 2015ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இந்திய பிரதமர் மோடியும் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஹாட்லைன் வசதி அமலுக்கு வந்தது. இதையடுத்து வரும் 20ம் தேதியுடன் ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதால் இந்தியாவுடனான ஹாட்லைன் வசதி தொடருமா என்ற கேள்வி எழுந்தது. இதற்குப் பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் ஒபாமாவின் பதவிக்காலம் முடிந்து டொனால்டு டிரம்ப் புதிய அதிபராக பதவியேற்ற பிறகும் அமெரிக்கா - இந்தியா இடையிலான ஹாட்லைன் வசதி தொடரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஹாட்லைன் வசதி என்பது ஒரு குறிப்பிட்ட அதிபருக்காக உருவாக்கப்படவில்லை என்றும் ஹாட்லைன் வசதி தொடர்ந்து நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.