ஈரான் - அமெரிக்கா ஒப்பந்தம் கையெழுத்து.. ஹார்முஸில் முற்றுகையை நீக்கிய அமெரிக்கா!
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான், கத்தார் மத்தியஸ்தத்தில் அமெரிக்கா-ஈரான் 14 அம்ச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. G7 விருந்தில் வெர்சாய்ஸ் அரண்மனையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் படி, 60 நாட்களில் ஹார்முஸ் வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு அமெரிக்கா முற்றுகையை நீக்கியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதலால், உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் மூடப்பட்டது. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகமும், சர்வதேச வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தசூழலில் தான், பாகிஸ்தான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக, மோதலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமெரிக்காவும் ஈரானும் கடந்த ஜூன் 14ஆம் தேதி ஒப்புக்கொண்டன.
தொடர்ந்து, கடந்த புதன்கிழமை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஏற்பாடு செய்த G7 இரவு விருந்தின் போது, பிரான்சின் வெர்சாய்ஸ் அரண்மனையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய 60 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசூழலில் தான், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல்கள் மீதான முற்றுகையை அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொண்டுள்ளதாக அமெரிக்க மத்திய ராணுவ கட்டளை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஈரான் இடையேயான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடலோரப்பகுதிகளில் நுழையும் மற்றும் வெளியேறும் கடல் போக்குவரத்து மீதான தடையை அமெரிக்க ராணுவம் விலக்கியுள்ளது.
ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களின் போக்குவரத்தை அமெரிக்கப் படைகள் தடுக்கவில்லை. அனைத்து அமெரிக்க இராணுவ முற்றுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம், ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களும் கடைப்பிடிக்கப்படுவதையும், பின்பற்றப்படுவதையும் உறுதி செய்வதற்காக அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் அப்பகுதியில் நிலைநிறுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஒப்பந்தத்தின் அடிப்படையில், இதுவரை 12 எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்க முற்றுகைப் பகுதியை கடந்து செல்ல அனுமதித்துள்ளதாகவும், நேற்று மட்டும் 1.25 பீப்பாய் கச்சா எண்ணெய் கப்பல் மூலம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

