பேச்சுவார்த்தைக்கு No சொன்ன ட்ரம்ப்.. ஹார்முஸை கண்ணிவெடிகளால் நிரப்பிய ஈரான்?
அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் தொடங்கிய ஈரான் போர் ஏழு மாதங்களாக நீடிக்க, கத்தார் மூலம் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு ஏழு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. போரை நிறுத்துதல், முடக்கப்பட்ட நிதி விடுவித்தல், ஹார்முஸ் நீரிணை திறப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் வெடிப்பு சத்தங்கள், கடல் கண்ணிவெடிகள் பற்றிய தகவல்கள் உலக வர்த்தகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகின்றன.
செய்தியாளர் - M.மீரா
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்தும் நீடித்து வருகிறது.
அமெரிக்கா–ஈரான் மோதலை முடிக்க, ஈரான் 7 நிபந்தனைகளை ட்ரம்ப் நிர்வாகத்திடம் கத்தார் மூலம் அறிவித்தது. அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துதல், முடக்கப்பட்ட ஈரானிய நிதியை விடுவித்தல், ஹார்முஸ் நீரிணையை 7 நாட்களில் திறப்பது மற்றும் துறைமுகங்களுக்கு எதிரான அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. ஆனால் ட்ரம்ப் இந்த முன்மொழிவை ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், அமெரிக்கா தற்போது ஹார்முஸ் நீரிணையில் கட்டுப்பாட்டை வைத்திருப்பதாகவும், ஈரான் பொருளாதார ரீதியாக அழுத்தத்தில் இருப்பதாகவும் ட்ரம்ப் கூறினார்.
இந்நிலையில் இப்போரின் ஒரு பகுதியாக, ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தனது தந்திரங்களை மாற்றியுள்ளதாக வரும் செய்திகளால் நிலைமை மீண்டும் பதற்றம் அடைந்துள்ளது. கடல் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தி நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மேலும் சிக்கலாக்க முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி அதிகாலை ஹார்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பகுதியில் மீண்டும் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், நீரிணையில் பெரிய அளவிலான தீப்பரவல் அல்லது கப்பல்கள் தாக்கப்பட்டதற்கான உடனடி உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கிடையே, ஈரானின் IRGC, சிறிய அளவிலான கடல் கண்ணிவெடிகளை Fajr-5 ராக்கெட்டுகள் மூலம் நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எளிதில் குறிவைக்கக்கூடிய தரைப்படகுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, Fajr-5 ஏவுகணைகளைப் பயன்படுத்தி, அதிநவீன கடல் கண்ணிவெடிகளை ரகசியமாக ஏவி நேரடியாக நீரிணைக்குள் பரப்பி வருவதாக உளவுத்துறை தெரிவிக்கிறது. கப்பல்களின் வகைகளை வேறுபடுத்தி அரிய ஒலி, காந்தம் மற்றும் AI தொழில்நுட்பத்துடன் அந்த கண்ணி வெடிகள் நிலை நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நெருக்கடியான பகுதியைக் கடக்க முயற்சிக்கும் அமெரிக்காவின் பாதுகாக்கப்பட்ட கப்பல்களுக்கு இந்த கண்ணி வெடிகள் அபாயகரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நிலைநிறுத்தப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாதவை.
கடல் கண்ணிவெடிகள் பயன்படுத்தப்பட்டால், அது ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு புதிய வகையான அச்சுறுத்தலை உருவாக்கக்கூடும். அவை குறிப்பிட்ட வகையைச் சேர்ந்ததாக இருந்தால், கப்பல் அருகில் செல்லும்போது அல்லது தொடர்பு ஏற்படும் போது வெடிக்கும் வகையிலும் இருக்கலாம். கண்ணிவெடிகள் கடலடியில் மறைக்கப்படலாம் அல்லது நீர்மட்டத்திற்கு சற்று கீழே மிதக்கலாம். அவற்றின் இருப்பிடம் எளிதில் தெரியாத நிலையில், கப்பல்கள் பாதுகாப்பான பாதையைத் தேர்வு செய்வது கடினமாகும்.
ஏற்கெனவே ஹார்முஸ் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கை எண்ணெய் மற்றும் சரக்கு போக்குவரத்தில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

