ஹார்முஸ் அதிர்ச்சி.. ஓயாத பதற்றம்.. பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்!
செய்தியாளர் - M.மீரா
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச சந்தையில் நிலவி வரும் நிலையில், மத்திய கிழக்கில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் தீப்பிடித்து எரிவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸில் அமெரிக்காவின் முற்றுகை தொடரும் நிலையில் அனுமதியின்றி மற்றும் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்படும் 'தடைசெய்யப்பட்ட பாதைகளைப்' பயன்படுத்தியதாகக் கூறி பல எண்ணெய் டேங்கர்களை ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் கடல் கண்ணிவெடிகள் (Naval Mines) மூலம் தாக்கி வருகிறது.
இதனால் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் (2026) மாதங்களில் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மிகக் கடுமையான உச்சத்தை எட்டியிருந்தது.
அக்டோபர் மாதத்தில் மட்டும் ஹார்முஸ் நீரிணையில் சுமார் 37 வணிகக் கப்பல்கள் வரை தாக்கப்பட்டுள்ளன, இது இந்த மோதல் தொடங்கியதிலிருந்து ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச தாக்குதல் எண்ணிக்கையாகும்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓமன் கடற்கரை அருகே Navig8 நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பான வீடியோக்களையும் செயற்கைக்கோள் படங்களையும் ராய்ட்டர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. அனுமதிக்கப்படாத பாதையில் சென்றதால் மூன்று எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. நவம்பர் தொடக்கத்திலும் ஓமன் மற்றும் கத்தார் கடற்பரப்புக்கு அருகே பல டேங்கர்கள் தீப்பற்றி எரிவது செயற்கைக்கோள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈரான் துறைமுகத்திற்குச் சென்று திரும்பிய செயின்ட் கிட்ஸ் நாட்டுக் கொடியுடன் வந்த சரக்குக் கப்பலை அமெரிக்க ராணுவ விமானம் தாக்கி முடக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதல்களால் கடலில் எண்ணெய் கசிவும் ஏற்பட்டுள்ளது. ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகக் கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய் படலங்கள் பரவியுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன.
போர் தொடங்கிய பிப்ரவரி மாத இறுதியில் இருந்து இதுவரை இப்பகுதியில் 130 கடல்சார் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் குறைந்தது 25 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் தாக்குதல்கள் உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

