\
Hong Hong fire accident
Hong Hong fire accident reuters

ஹாங்காங் தீ விபத்து.. 128 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை.. பின்னணியில் மூங்கில் சார விவகாரம்!

ஹாங்காங்கின் டாய் போ மாவட்டம் வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாத்தில் உள்ள 32 அடுக்குமாடி குடியிருப்பில் நவம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
Published on
Summary

ஹாங்காங்கின் டாய் போ மாவட்டம் வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாத்தில் உள்ள 32 அடுக்குமாடி குடியிருப்பில் நவம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

ஹாங்காங் குடியிருப்பில் தீ விபத்து

சீனாவின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவு ஹாங்காங் ஆகும். ஹாங்காங் என்பது சீன மக்கள் குடியரசின் ( PRC) ஒரு சிறப்பு நிர்வாகப் பகுதியாகும். உலகின் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஹாங்காங்கும் ஒன்று. இந்த நிலையில், ஹாங்காங்கின் டாய் போ மாவட்டம் வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாத்தில் உள்ள 32 அடுக்குமாடி குடியிருப்பில் நவம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாயிரம் குடியிருப்புகள் உள்ள 32 மாடிகளைக் கொண்ட அந்த அடுக்குமாடி கட்டடத்தின் புதுப்பித்தல் பணிக்காக அதன் வெளிப்புறத்தில் மூங்கில் சாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த சாரத்தில் ஏற்பட்ட தீ பலத்த காற்று காரணமாக அசுரவேகத்தில் அங்கிருந்த ஏழு கட்டடங்களுக்குப் பரவியதாக சொல்லப்படுகிறது.

128 பேர் உயிரிழப்பு..79 பேர் காயம்

தீ விபத்து நிகழ்ந்து 42 நேரத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் முற்றிலும் தீயை அணைத்த பின்னர், இறப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்படி, இவ்விபத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 79 பேர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அந்த வளாகத்தில் வசிக்கும் 4,600 பேரில் நூற்றுக்கணக்கானோர் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்றைய நிலவரப்படி சுமார் 200 பேர் காணாமல் போயுள்ளனர். 1948ஆம் ஆண்டுக்குப் பிறகு, இது ஹாங்காங் நகரத்தின் மிக மோசமான தீ விபத்து ஆகும். முன்னதாக அந்த ஆண்டு ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 176 பேர் உயிரிழந்திருந்தனர்.

விவாதத்தைத் தூண்டியிருக்கும் மூங்கில் சாரம்

ஹாங்காங்கில் 3,68,000க்கும் மேற்பட்ட வீட்டுப் பணியாளர்கள் வசிப்பதாகவும், இவர்களில் பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் பலர் தாங்கள் வேலை செய்யும் வீடுகளுக்குள் வசிக்கின்றனர் என்றும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இதில், விபத்து நிகழ்ந்த குடியிருப்பில் டஜன் கணக்கானவர்கள் புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் உள்ளனர் என அது தெரிவிக்கிறது. 19 பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் இன்னும் காணவில்லை என்று பிலிப்பைன்ஸ் ஆதரவுக் குழு தெரிவித்துள்ளது. முழுக்க முழுக்க மூங்கில் சாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தே இதற்கு முக்கியக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இது, ஹாங்காங்கின் நீண்டகால மூங்கில் சாரக்கட்டுகளை நம்பியிருப்பது குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது, இது நகரம் முழுவதும் இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பண்டைய கட்டுமான நுட்பமாகும் என ஏ.பி. நியூஸ் தெரிவித்துள்ளது. மூங்கில் இலகுரக, மலிவான மற்றும் நெரிசலான நகர்ப்புறங்களில் நிறுவ எளிதானது என்பதால் இது பிரபலமாக உள்ளது. ஆனால் இது எரியக்கூடியது. மேலும் இது தொடர்பான விபத்துக்கள் 2018 முதல் 23 உயிர்களைக் கொன்றுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நகர மேம்பாட்டு பணியகம் உலோக சாரக்கட்டுகளை நோக்கி மாறுவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறினாலும், அது விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஹாங்காங்கில் அதிகரித்து வரும் வீட்டுச் செலவுகள் மற்றும் பழைய கட்டடங்களுக்கு மத்தியில் இந்த விபத்து, அவர்களுடைய வாழ்வில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com