ஹாங்காங்கில் தடையை மீறி பேரணி... போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு..!
ஹாங்காங்கில் தடையை மீறி பேரணி நடத்திய போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஹாங்காங்கில், குற்றச்சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்படுவோரை சீனாவிடம் ஒப்படைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்லாயிரக்கணகான பொதுமக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் யுன் லாங் மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் முகமூடி அணிந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை ஆயுதங்கள் கொண்டு கடுமையாக தாக்கினர். தாக்குதலில் 45 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய போராட்டக்காரர்கள், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக யுன் லாங் பகுதிக்கு பேரணியாக செல்ல திட்டமிட்டனர். பேரணி நடத்த காவல்துறை மறுப்பு தெரிவித்தது. ஆனாலும் தடையை மீறி போராட்டக்காரர்கள் யுன் லாங் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது காவல்துறைக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும் பேரணியை தடுக்கும் வகையில் யுன் லாங் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் தடையை ஏற்படுத்தினர்.