60 பேரில் ஒருவருக்கு HIV! அழகிய நாட்டை அதிரவைத்த அவசரநிலை! அதிர்ச்சி பின்னணி என்ன?
சுற்றுலா தலமாக பிரபலமான ஃபிஜி, எச்.ஐ.வி பரவலால் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஐந்து ஆண்டுகளில் 167 பேரில் ஒருவரிலிருந்து 60 பேரில் ஒருவராக பாதிப்பு உயர்ந்துள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடு தான் ஃபிஜி... சுற்றுலா, அழகான கடற்கரைகள் என உலக அளவில் பிரபலமான இந்த நாட்டில், தற்போது வேகமாக அதிகரித்து வரும் எச்.ஐ.வி பாதிப்புகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக, எச்.ஐ.வி பாதிப்பை தேசிய நெருக்கடியாக அறிவித்துள்ள ஃபிஜி அரசு, பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஃபிஜியில் சுமார் 167 பேரில் ஒருவருக்கு எச்.ஐ.வி இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 60 பேரில் ஒருவராக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, வயது வந்தவர்களிடம் எச்.ஐ.வி பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
மொத்த மக்கள்தொகை 10 லட்சத்திற்கும் குறைவாக உள்ள ஃபிஜியில், 2025-ம் ஆண்டில் மட்டும் 2,016 புதிய எச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஃபிஜியில் எச்.ஐ.வி பாதிப்புகள் இவ்வளவு வேகமாக அதிகரிக்க காரணங்களில் ஒன்றாக போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாதுகாப்பற்ற முறையில் ஊசிகளைப் பகிர்ந்து கொள்வது சுட்டிக்காட்டப்படுகிறது. 2025-ம் ஆண்டில் பதிவான புதிய பாதிப்புகளில், பாதிக்கும் மேற்பட்டவை பாலியல் தொடர்புடனும், 42 சதவீதத்திற்கும் அதிகமானவை ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவதுடனும் தொடர்புடையதாக UNAIDS தெரிவித்துள்ளது.
குறிப்பாக, போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் ஒரே ஊசி அல்லது சிரிஞ்சை பகிர்ந்து கொள்வது, எச்.ஐ.வி பரவும் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், எச்.ஐ.வி பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், ஃபிஜி அரசு தற்போது இலவச எச்.ஐ.வி பரிசோதனை, தடுப்பு சேவைகள் மற்றும் சிகிச்சையை விரிவுபடுத்தி வருகிறது. மேலும், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களிடையே எச்.ஐ.வி பரவுவதைத் தடுக்கும் வகையில், ஊசி மற்றும் சிரிஞ்ச் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஃபிஜியில் ஏற்கனவே 2025-ம் ஆண்டு ஜனவரியில் எச்.ஐ.வி பரவல் தொடர்பாக தேசிய அளவிலான outbreak அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மேலும் தீவிரமான தேசிய நெருக்கடியாகக் கருதி அரசு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. ஒரு சிறிய பசிபிக் தீவு நாடாக இருக்கும் ஃபிஜியில்... இவ்வளவு வேகமாக எச்.ஐ.வி பாதிப்புகள் அதிகரித்து, தேசிய நெருக்கடி அறிவிக்கப்படும் அளவுக்கு நிலைமை சென்றிருப்பது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
