வின்ஸ்டன் சர்ச்சிலின் 150-வது பிறந்தநாள்: தனித்துவமிக்க தலைவரின் வரலாற்றுப்பாதை!
செய்தியாளர்: பரணி ரவிச்சந்திரன்
இரண்டாம் உலகப் போரின் நாயகனாக கருதப்படும் வின்ஸ்டன் சர்ச்சிலின் 150ஆவது பிறந்தநாள் பிரிட்டனில் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலக வரலாற்றில் தனித்துவமிக்க தலைவராக சர்ச்சில் போற்றப்படுவதன் காரணம் என்ன? பார்க்கலாம்...
1899... தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலோ- போயர் போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம் அது. போர் தொடர்பான செய்திகளை சேகரித்ததற்காக சிறை பிடிக்கப்பட்டார் இளம் பத்திரிகையாளரான வின்ஸ்டன் சர்ச்சில். ஆம். அடிப்படையில் ஓர் எழுத்தாளர் என்பதே சர்ச்சிலின் அடையாளம். துணிவையும், வீரத்தையும் மட்டுமே துணையாக கொண்ட 25 வயது பத்திரிகையாளரான அவர், ஓடும் ரயிலில் இருந்து குதித்து தாயகம் திரும்பினார்.
பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்ததால், சர்ச்சிலுக்கும் அரசியல் ஆசை துளிர்விட்டதில் வியப்பேதுமில்லை. அதுவே பத்திரிகையாளராக இருந்த சர்ச்சிலை அரசியலை நோக்கி திருப்பியது. தந்தையும் அரசியல்வாதி என்பதால், அவர் அரசியலில் நுழைவது ஒன்றும் கடினமாக இல்லை. அந்த நெருப்பாற்றில் நீந்தி கரை சேர்வதே அவருக்கு பெரும் சவாலாக இருந்தது. அவரே இதை இப்படிச் சொல்கிறார்.
26 வயதில் முதன்முதலாக பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த சர்ச்சில், 1914முதல் 1918ஆம் ஆண்டு வரை நடந்த முதல் உலகப் போரின்போது தனது போர் வியூகத்தாலும், வசீகரிக்கும் பேச்சாலும் கவனம் பெற்றார். அரசியலின் நுணுக்கங்களை அறிந்த அவர், உலகம் ஓர் இருண்ட காலத்தில் சிக்கி அல்லாடியபோது, பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்க நேர்ந்தது. ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் கை ஐரோப்பாவில் ஓங்கியிருந்தது. உலகம் பாசிசத்தின் கால்களின்கீழ் கொண்டுவரப்படுவதை தடுத்த ராஜதந்திரிகளில் ஒருவர் சர்ச்சில். குறிப்பாக ஹிட்லரின் நாஜி படை இங்கிலாந்தை நோக்கி முன்னேறியபோது, ஒப்பற்ற வியூகத்தால் தாய்நாட்டை காத்தார் சர்ச்சில்.
அரசியலராக, சிறந்த பேச்சாளராக திகழ்ந்தாலும் சர்ச்சிலுக்கு எழுத்தாளர் என்ற மற்றொரு பக்கமும் உண்டு.. கல்லூரி வாசலைக் கூட மிதிக்காத அவர், மறுபுறம் தீவிர வாசகராக திகழ்ந்தார். ஏராளமான நூல்களை வாசித்தார். புத்தகங்கள் ஊட்டிய அறிவால் மிகச் சிறந்த எழுத்தாளராகவும் மிளிர்ந்தார்... அதற்கு சிகரம் வைக்கும் விதமாக இரண்டாம் உலகப் போரை பற்றிய அவரது நூலுக்கு இலக்கியயத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ள வின்ஸ்டன் சர்ச்சிலின் வரலாற்றுப் பக்கங்களில், விமர்சனங்களுக்கும் இடமில்லாமல் இல்லை. பிரிட்டனின் ஏகாதிபத்தியத்தை விரும்பிய சர்ச்சில், காலனி நாடுகள் விடுதலை பெறக் கூடாது என்ற முழக்கத்தை முன்வைத்தவர். அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று... பல லட்சம் பேர் செத்து மடிந்த வங்காள பஞ்சத்திற்கு வின்ஸ்டன் சர்ச்சில் தான் காரணம் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் விமர்சனத்தைப் புறந்தள்ள முடியாது.
சர்ச்சில் தமது காலத்தில் வெளிப்படுத்திய பேச்சுகள், எழுத்துகளில் சில கூற்றுகள் காலம் கடந்தும் மேற்கோள்களாக நினைவுகூரப்படுகின்றன.
மாற்றங்கள் அனைத்தும் முன்னேற்றத்தைக் குறிக்காது. ஆனால், முன்னேறுவதற்கு நீங்கள் மாற வேண்டியது அவசியம்.
ஒரு தோல்வியில் இருந்து மற்றொரு தோல்விக்கு உற்சாகத்தை இழக்காமல் முன்னேறும் திறன் தான் வெற்றி.
பயம் என்பது எதிர்வினை. வீரம் என்பது தீர்மானத்தின் பிரதிபலன்.
தொடர் முயற்சிகளே முழு திறனை வெளிக்கொண்டு வரும். வலிமையோ, அறிவோ அல்ல
சுதந்திரத்திற்காகப் போராடாதவர்களுக்கு வரலாறு கருணை காட்டாது.
"அதிகாரம் அபாயகரமானது.. அதை அடைந்தவர்களை அது துஷ்பிரயோகம் செய்ய வைக்கும்... அடைய நினைப்பவர்களை தன்னிலை மறந்தவர்களாக மாற்றும் என்ற கூற்றுக்கு" சொந்தக்காரர் சர்ச்சில். அவரது கூற்று அவருக்கே பொருந்துவதில் ஒன்றும் வியப்பில்லை.!