வரலாற்றில் முதல்முறை.. 3 மகத்தான சாதனைகள்.. அமெரிக்க அரசியலில் புதிய மைல்கல்!
2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்) அதிபர் டொனால்டு ட்ரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அவருடைய இரண்டாவது பதவிக்காலத்தின் பாதியில் நடைபெறும் இந்தத் தேர்தல் முடிவுகள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை எந்தக் கட்சி கட்டுப்படுத்தும் என்பதைத் தீர்மானிக்கிறது. அதாவது, அதிபர் ட்ரம்பின் எஞ்சிய பதவிக்காலத்தில் மிகப்பெரிய அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த அரசியல் அலையில், அமெரிக்க வரலாற்றின் புதிய மைல்கல்லாக மூன்று முக்கியப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அமெரிக்க செனட் சபையின் வரலாற்றிலேயே, முதல்முறையாக தன்பாலின ஈர்ப்பை வெளிப்படுத்திய நபரான கிறிஸ் பாப்பாஸ் நியூஹாம்ப்ஷயர் மாகாணத்தில் இருந்து செனட்டராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், ஜார்ஜியா மாகாணத்தின் வரலாற்றில் முதல் கருப்பினப் பெண் ஆளுநராக கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் வரலாற்று வெற்றிபெற்றுள்ளார். மேலும், மிச்சிகன் மாகாணத்தில் கடுமையான அரசியல் எதிர்ப்புகளையும் டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட விமர்சனங்களையும் கடந்து, அமெரிக்க செனட் சபையின் முதல் இஸ்லாமிய செனட்டராக அப்துல் எல்-சயீத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாறு படைத்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சமூக மாற்றங்கள் ஒருபுறமிருக்க, தேர்தல் முடிவுகள் டொனால்டு ட்ரம்பின் சர்ச்சைக்குரிய அதிக வர்த்தக வரிவிதிப்பு கொள்கைகளுக்கும், இந்தியாவின் நீண்டகால வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளுக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள எதிர்க்கட்சியினர், ட்ரம்பின் தன்னிச்சையான வெளியுறவுக்கொள்கைகளையும், வர்த்தகப் போரையும் கட்டுப்படுத்த இந்த புதிய பிரதிநிதித்துவ பலத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

