ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பின் டிராமில்  பணிபுரிந்ததை  நினைவு கூறும் ஜப்பான் பெண்!!

ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பின் டிராமில்  பணிபுரிந்ததை  நினைவு கூறும் ஜப்பான் பெண்!!
ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பின் டிராமில்  பணிபுரிந்ததை  நினைவு கூறும் ஜப்பான் பெண்!!

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு வீச்சு தாக்குதலுக்கு பிறகு டிராம்வண்டியில் நடத்துநராக பணிபுரிந்த நினைவுகளை நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் டெட்சுகோ ஷாகுடா.

அந்தகாலத்தில் ஜப்பானில் யுத்தம் தீவிரமடைந்து, அதிக எண்ணிக்கையிலான ஆண் தொழிலாளர்கள் போருக்கு சென்றுவிட்டதால், டிராம் இயக்கும் வேலைக்கு பயிற்சி பெற்ற இளம் பெண்கள் குழுவில் ஷாகுடாவும் ஒருவர். 75 ஆண்டுகளுக்கு முன்பு அணுகுண்டு வெடித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, பேரழிவிற்குள்ளான ஹிரோஷிமாவில் டிராம் வண்டிகளில்  நடத்துனராக  தனது வேலையை  மீண்டும்  தொடங்கியபோது டெட்சுகோ ஷாகுடா  வயது 14 .

இதுபற்றி கூறும் அவர் “ ஆகஸ்ட் 6, 1945 இல் வெடித்த குண்டு எல்லாவற்றையும் மாற்றியது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் மீண்டும் டிராம் வண்டிகளை  ஹிரோஷிமா வழியாக  இயக்கியபோது  வழியில் பெரிய இடிபாடுகளும், சிதைந்த உடல்களுமே கிடந்தது. காயமடைந்தவர்கள்  உட்பட பல  வகையான  மக்களை ரயிலில் அழைத்துவந்தோம்”  என்கிறார் தற்போது  89 வயதான ஷாகுடா

தொடர்ந்து பேசும் அவர் “அமெரிக்கா ஜப்பானை நெருங்கியபோது இங்கு பெரும் உணவுப்பஞ்சம் நிலவியது. குண்டுவெடிப்பு நடந்த அன்று நான் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பயங்கர சத்தத்துடனும், ஒளியுடனும் குண்டு வெடித்தது, பலர் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். ஹிரோஷிமாவில் குண்டுவெடித்தபோது டிராம் நிறுவனத்தில் பணியாற்றிய 185 ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உயிரிழந்தனர், 266 பேர் படுகாயமடைந்தனர். மேலும் அப்போது இந்த நிறுவனத்தில் 123 டிராம்கள் இருந்தன, குண்டுவெடிப்புக்கு பிறகு அதில் மூன்று மட்டுமே மிஞ்சின.

குண்டுவெடிப்புக்கு பிறகு டிராமில் எப்போது கரும் புகை மூட்டமாகவே இருக்கும். இந்த புகைதான் பலரின் உடல்களை சாப்பிடுகின்றன என்று நினைப்பேன். இந்த குண்டுவெடிப்பிற்கு  பின்னர் டிராமில் கட்டணம் இலவசம், அதனோடு உயிர் பிழைத்தவர்கள்  இந்த ரயிலை  பேரழிவின்  மத்தியிலான நம்பிக்கையாகவும் மற்றும் வாழ்வின் தொடர்ச்சியாகவும்  பார்த்தார்கள்” என்கிறார்

ஆசிரியராக வேண்டும் என்ற நம்பிக்கையில் எலக்ட்ரிக் நிறுவனத்தின் பணிக்கு சேர்ந்த இவர் சூழல் காரணமாக குண்டுவெடிப்பிற்கு பிறகான காலகட்டத்தில் டிராம் நடத்துநராக பணிபுரிந்ததாகவும் சொல்கிறார். ஹிரோஷிமா எலக்ட்ரிக் ரயில்வேயின் ரயில் திட்டமிடல் பிரிவைச் சேர்ந்த யூட்டா அஸூமி, அணுசக்தித் தாக்குதலுக்குப் பிறகு நகரின் மின் உற்பத்தி நிலையத்திலும் குண்டு வீசப்பட்டதாகக் கூறினார். ஆனாலும் ரயில்களை இயக்க அதிகாரிகள் மற்றொரு மின் நிலையத்திலிருந்து மின் இணைப்புகளை  உருவாக்கினார்கள். “ஆகஸ்ட்  15 ஆம் தேதி  ஜப்பான்  சரணடைந்த  பின்னர், சகுடா  தனது டிராம் வேலையை  விட்டுவிட்டு குமனோவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினேன்” என்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com