மத நிந்தனை விவகாரம்: பாக்.இல் இந்து கோயில்கள், வீடுகள் சூறை!
பாகிஸ்தானில், பள்ளி தலைமை ஆசிரியர் மதத்தை இழிவுபடுத்தியதாக கூறி, இந்துக்கோயில்கள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் உள்ள சிந்த் மாகாணத்தில் அதிகமான இந்துக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கோட்கி என்ற பகுதியில் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராக இந்து மதத்தை சேர்ந்த நோடன் மால் என்பவர் இருக்கிறார். இவர், இஸ்லாம் மதத்தை தவறாகப் பேசியதாகக் கூறி, ஒரு கும்பல் இவரைத் தாக்கியது. பின்னர் அந்தப் பகுதியில் இருந்த இந்து கோயில்களை அடித்து உடைத்தது. இந்துக்களின் கடைகள் மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டன. பள்ளி மாணவனின் தந்தை அப்துல் அஜீஸ் ராஜ்புத் அளித்த புகாரை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இது பொய்யான புகார் என்று பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் பற்றி அங்குள்ள மனித உரிமை ஆணையம் கவலைகளை தெரிவித்துள்ளது. சிந்த் மாகாண காங்கிரஸ் அமைப்பு, ‘கோட்கி பகுதியில் உள்ள மாணவன் ஒருவர் மதநிந்தனை தொடர்பாக கூறிய புகாரை அடுத்து, இந்த வன்முறை நடத்தப்பட்டுள்ளது. சிறுமைபான்மையினருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு வலியுறுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.
கோட்கி தவிர, மிர்புர் மதேலோ, அதில்புர் ஆகிய நகரங்களிலும் வன்முறை வெடித்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் டான் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.