வங்கதேசம்| கைது செய்யப்பட்ட இந்து துறவி-க்கு ஜாமீன் நிராகரிப்பு
அண்டை நாடான வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது முதல் தற்போதுவரை, இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், சிறுபான்மையினருக்கு ஆதரவாக இந்து சமூகத்தினர் நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் தலைவரான ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ் வங்கதேச அரசால் கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சிறுபான்மையினருக்கு ஆதரவான போராட்டத்தின்போது, வங்கதேச தேசியக் கொடியை அவமதித்ததாக அவர்மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் அவருக்கு ஜாமீனும் வழங்கப்படவில்லை. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று அவரது ஜாமீன் மனுவுக்கு ஆதரவாக வாதாட 11 வழக்கறிஞர்கள் தலைநகர் தாகாவிலிருந்து சிட்டகாங் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தனர். ஆனால் இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, அவருடைய ஜாமீன் மனுவை நிராகரித்தார். முன்னதாக, இந்த வழக்கின்மீது கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி விசாரணை நடைபெற இருந்தது. அப்போது இந்து மதத் தலைவர் சார்பாக வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததால், அரசுத் தரப்பு பரிந்துரையின் பேரில், நீதிமன்றம் தேதியை இன்றைக்கு (ஜனவரி 2, 2025) ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.