ஆணியடிக்காமல் கனமான பொருள்களைத் தொங்கவிடலாம்: மாணவரின் புதிய தொழில்நுட்பம்
பொதுவாக சுவர்களில் சிறு படத்தைத் தொங்கவிட வேண்டுமென்றால்கூட, நாம் சுத்தியலை எடுத்து ஆணியை அடிக்கத் தொடங்கிவிடுவோம். நீங்கள் சுத்தியலே எடுக்கவேண்டாம் என்கிறார் துபாயைச் சேர்ந்த இந்திய மாணவர் இஷிர் வாத்வா.
சுவரில் துளையிடாமல், ஆணி அடிக்காமல் கனமான பொருள்களை காந்தம் மூலமாகத் தொங்கவிடும் புதிய தொழில்நுட்பத்தை அவர் கண்டுபிடித்துள்ளாா்.
பள்ளிக்கூடத்திற்காக செய்த இந்த திட்டம், தற்போது அவரது குடும்பத்தின் தொழிலாக மாறியிருக்கிறது. துபாயில் உள்ள ஜெம்ஸ் வேர்ல்டு அகாடமியில் படிக்கும் மாணவர் இஷிர், பத்தாம் வகுப்புப் பாடத்திற்காகத்தான் இந்த புதுமையான கண்டுபிடிப்பைச் செய்திருக்கிறார். வீடுகள், அலுவலகங்களில் நாள்காட்டிகள் மட்டுமல்லாமல், மின்விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட கனமுள்ள மின்சாதனப் பொருள்களையும் சுவரில் துளையிட்டு மாட்டுவதால் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதனை எளிதாக தவிர்க்கும் நோக்கத்தில் , உலோக டேப், காந்தம் ஆகியவற்றின் துணையுடன் கனமான பொருள்களை சுவரில் மாட்டுவதற்கான புதிய வழிமுறையை இஷிா் வாத்வா உருவாக்கியுள்ளாா். "ஸ்க்ரு மற்றும் ஆணிகளைப் பயன்படுத்துவதால் சுவர் சேதமடைவதுடன் மாசுகள் ஏற்படுகின்றன. துளையிடுவதால் வேறு பல பிரச்சினைகளும் உண்டு" என்கிறார் மாணவர் இஷிர் வாத்வா.
மாணவர் இஷிர் வாத்வா
சுவரில் துளையிடாமல், ஆணியடிக்காமல் பொருள்களைத் தொங்கவிடுவதற்கான சாதனத்தைக் கண்டறியமுடியுமா என்று திட்டமிட்டவர், அமெரிக்காவில் பர்டியூ பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் தன் சகோதரர் அவிக்கிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். பின்னர், சகோதரர் கொடுத்த ஆலோசனையின்படி உலோக டேப், நியோடைமியம் காந்தம் ஆகியவற்றைப் பயன்படுத்தி கனமான பொருள்களைத் தாங்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கினார் இஷிர் வாத்வா.
இஷிரின் கண்டுபிடிப்பில் மகிழ்ந்துள்ள அவரது தந்தை சுமேஷ் வாத்வா, தன்னுடைய பணியை உதறிவிட்டு அதனை வணிகரீதியாக தயாரிக்கும் தொழிலில் ஈடுபட ஆர்வம் கொண்டுள்ளார்.