தாயைப் போல் தம்பியை காத்த சிறுமி! இடிபாடுகளுக்கு இடையே நிகழ்ந்த அதிசயங்கள்!

தாயைப் போல் தம்பியை காத்த சிறுமி! இடிபாடுகளுக்கு இடையே நிகழ்ந்த அதிசயங்கள்!
தாயைப் போல் தம்பியை காத்த சிறுமி! இடிபாடுகளுக்கு இடையே நிகழ்ந்த அதிசயங்கள்!

பேரழிவுகளின் போது சில அதிசயங்களும் சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் நிகழ்வதுண்டு. சிரியாவில் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த பச்சிளம் குழந்தை உட்பட 3 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்ட காட்சிகள், அதிசயத்துடன் கூடிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் நேரிட்ட நிலநடுக்கங்களில் இதுவே மிகக் கொடூரமானதாக தரவுகள் தெரிவிக்கின்றன. துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 2 நாட்கள் கடந்துவிட்டது. தரைமட்டமான கட்டடங்களில் இருந்து உயிர் தப்பியவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்துவிட்டன. இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

கொடும் அழிவை ஏற்படுத்தியுள்ள நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நேர்ந்த நிலநடுக்கங்களில் இதுவே பேரழிவானது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் மையப்பகுதியான Pazarcik சென்ற அதிபர் தயீப் எர்டோகன், பூகம்பத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஹட்டே மாகாணத்திற்கும் பயணப்படுகிறார். சுமார் 60 ஆயிரம் பேர், பூகம்பம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக வந்திருந்த போதிலும் எண்ணற்ற மக்கள் உதவிகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.

நிலநடுக்கம் நேரிட்டு 2 நாட்களுக்குப்பிறகு Kahramanmaras நகரத்தில் இடிபாடுகளில் இருந்து 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பது, மீட்புப் படையினரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுவனின் தந்தையும் முன்னதாக மீட்கப்பட்டிருந்தார். அதேபோல, அதியமான் (Adiyaman) நகரில், 10 வயது சிறுமி மீட்கப்பட்டதை மீட்புக்குழுவினரும், அங்கிருந்தவர்களும் கொண்டாடினர். பெரும் துயருக்கு மத்தியில் இதுபோன்ற மீட்புகள் நம்பிக்கை ஒளியை பாய்ச்சிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள மீட்புக்குழுக்களும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் இணைந்துள்ளன.

2 கோடியே 30 லட்சம் பேர் நிலநடுக்கப் பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. நிலநடுக்கத்திற்கு தப்பியவர்கள் அரசின் முகாம்களிலும், கார்களிலும், வெளியிலும் தங்கிக்கொண்டிருக்கிறார்கள். கடுமையான பனிப்பொழிவு இரவு நேரத்தை மிகக் கொடுமையானதாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அங்குள்ள மருத்துவமனை கட்டட இடிபாடுகளில் மீட்புப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் குழந்தை, இன்னும் கண்களைக் கூட சரியாக திறக்க முடியாமல் இருந்தது. குழந்தை உயிருடன் இருப்பதை கண்ட மீட்புக் குழுவினர் அதனை பத்திரமாக மீட்டு, சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், குழந்தையின் பெற்றோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், இடிபாடுகளில் சிக்கிய 7 வயது சிறுமி, தனது தம்பியை அரவணைத்து பாதுகாத்து காப்பாற்றிய சம்பவம் காண்போரை நெகிழ வைக்கிறது. தம்பி மீது கட்டட இடிபாடுகள் படாதவாறு தமது முதுகிற்கு மேலே கட்டட பாரத்தை தாங்கியபடியும், தமது கைகளால் தம்பியின் முகத்தில் தூசி விழாத படியும் பாதுகாத்த காட்சிகள் நெகிழ வைக்கின்றன. இருவரும் சுமார் 36 மணி நேரமாக உதவிக்காக காத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் மீட்கப்பட்டபோது எடுத்த புகைப்படத்தை ஐநா சபை பிரதிநிதி முகமது சஃபா தமது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதுதொடர்பான காட்சிகள் வெளியான நிலையில், ‘அற்புதமான அக்கா’ என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com