'லாலா' புயலின் கோரத்தாண்டவம்.. இருளில் மூழ்கிய 2,00,000 பேர்.. மிரட்டும் இயற்கை அன்னை!
செய்தியாளர் - கார்த்திகேயன்
கடந்த சில நாட்களாகவே இயற்கை அன்னையின் கோரத்தாண்டவம் உலகம் முழுவதும் உள்ள மக்களை கடுமையாக வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. கொலம்பியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் மிகக் கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழந்தனர். மேலும், ஒருசில இடங்களில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, பெரும் பீதியையும் ஏற்படுத்தியிருந்தது. ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில், பெரும் புயல் ஏற்பட்டு, கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் மிகக்கடுமையான மழைப்பொழிவு, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டது. இதுமட்டுமின்றி, எல் நினோ போன்ற காலநிலை மாற்றங்களும் நடைபெற்று, மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில், லாலா என்ற புயல் ஏற்பட்டு, மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பசிபிக் பெருங்கடலில் வெப்ப மண்டல புயலாக உருவான லாலா, ஆகஸ்டு 15-ஆம் தேதி அன்று, ஹாவாயின் பிக் தீவை கடுமையாக தாக்கிவிட்டு, நேற்று கரையை கடந்தது.
இதையடுத்து, ஹாவாயின் பெரும்பாலான பகுதிகளில், கனமழை, பலத்த காற்று, திடீர் வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஹாவாஸ் தீவு முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். புயலின் தாக்கத்தால் மரங்கள் முறிந்து விழுந்ததோடு மின்கம்பங்களும் கடுமையாக சேதம் அடைந்தததே, மின்வெட்டு ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது.
பிக் தீவின் தெற்குப் பகுதியில் உள்ள நலேஹு, வையோஹினு ஆகிய கடலோரப் பகுதிகளில் வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து அவசர கால மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆபத்தான சூழ்நிலைகள் நிலவுவதால் பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே பயணம் செய்ய வேண்டாம் என்றும், வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள் மற்றும் மின்கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

