2 இந்தியர்களுக்கு தொற்று உறுதி.. வேகமெடுக்கும் ஹன்டா வைரஸ்.. அறிகுறிகள், பாதிப்புகள் என்ன?
ஹன்டா வைரஸ் தொற்று குறித்து உலகளாவிய கவலை அதிகரித்து வரும் நிலையில், கோவிட்-19 போன்ற வைரஸ்களிலிருந்து இந்தத் தொற்று மிகவும் வித்தியாசமாகச் செயல்படுகிறது என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நெதர்லாந்தைச் சேர்ந்த எம்.வி.ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பல், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அர்ஜெண்டினாவில் தனது பயணத்தைத் தொடங்கியது. இதில் 150 சுற்றுலாப் பயணிகளும், 28 நாடுகளைச் சேர்ந்த 72 மாலுமிகளும் இருந்த நிலையில், அந்தக் கப்பலில் இருந்த 5 பேருக்கு ஹன்டா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பலியாகிவிட்டதால் இந்த விஷயம் பல நாடுகளில் பரபரப்பை உருவாக்கிவருகிறது.
இந்நிலையில், இந்த கப்பல் குழுவில் பணியாற்றி வரும் இரு இந்தியர்களுக்கு தொற்று அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிப்புக்குள்ளான கப்பல் குழுவில் இருந்த இரு இந்தியர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். இது தனி நபர் சார்ந்ததாக இருப்பதால், அங்கிருந்து இந்தியாவுக்கு தொற்று பரவும் அபாயம் தற்போதைக்கு இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக, ஹன்டா வைரஸ் எலிகள் போன்ற விலங்குகள் மூலம் பரவுகிறது. ஆனால் இந்தச் சம்பவத்தில், நெருங்கிய தொடர்பில் இருந்த மனிதர்களுக்கிடையே வைரஸ் பரவியிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹன்டா வைரஸ் தொற்று குறித்து உலகளாவிய கவலை அதிகரித்து வரும் நிலையில், கோவிட்-19 போன்ற வைரஸ்களிலிருந்து இந்தத் தொற்று மிகவும் வித்தியாசமாகச் செயல்படுகிறது என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். “எலிகள் நடமாட்டம் அதிகம் உள்ள சூழலில், அதன் சிறுநீர், எச்சங்கள் அல்லது உமிழ்நீரில் இருந்து காற்றில் பரவும் வைரஸ் துகள்களை சுவாசிப்பதால், ஹண்டா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வைரஸ் உடல் முழுவதும் உள்ள இரத்த நாளங்களைப் பாதித்தாலும், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களே பெரும்பாலும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் உறுப்புகளாகின்றன.
ஹன்டா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் பொதுவான வைரஸ் தொற்றுகளை ஒத்திருப்பதுதான். ஆரம்ப அறிகுறிகளில் பொதுவாக காய்ச்சல், சோர்வு, கடுமையான தசை வலி, தலைவலி, குளிர் நடுக்கம், குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று அசௌகரியம் ஆகியவை அடங்கும். ஒருமுறை உறுப்பு பாதிப்பு தொடங்கினால், சில நாட்களுக்குள் நிலைமை மிக வேகமாக மோசமடையக்கூடும். இது, காற்றில் பரவும் சுவாச வைரஸ்களைப்போல பரவுவதில்லை. இது கொரோனா வைரஸ்களைப்போலப் பரவாது. மாறாக, மிகவும் நெருக்கமான தொடர்பு மூலமே பரவும்” என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

