காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் | மேலும் 3 பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்!
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் அடுத்தகட்டமாக தங்கள் வசம் உள்ள 3 பிணைக்கைதிகளை விடுவித்துள்ளது. ஐயர் ஹார்ன், சாகுய் டெக்கல்-சென், சாஷா (அலெக்சாண்டர்) ட்ரூஃபனோவ் ஆகிய 3 பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர். இந்த மூவரும் கடந்த 16 மாதங்களாக ஹமாஸ் பிடியில் இருந்து வந்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். செஞ்சிலுவை சங்கத்திடம் இவர்களை ஒப்படைக்கும் முன் காசா மக்கள் முன் அணிவகுத்து வரச்செய்யப்பட்டனர். அப்போது விடுவிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் தங்கள் சொந்தத்தை வரவேற்க உணர்ச்சிப்பெருக்குடன் காத்திருந்தனர்.
2023 அக்டோபரில் 251 பேரை ஹமாஸ் சிறைபிடித்ததில் இதுவரை 175 பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 76 பேர் ஹமாஸ் பிடியில் உள்ளனர். இன்று நள்ளிரவு 12 மணிக்குள் ஹமாஸ் தன்னிடம் உள்ள மீதமுள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டாமல் மிகமோசாமான விளைவுகள் ஏற்படும் என ட்ரம்ப் சில நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தார். அதற்கு ஹமாஸும் பதிலடி கொடுத்திருந்தது. இந்த நிலையில், 3 பேரை மட்டுமே ஹமாஸ் விடுவித்ததால் அடுத்து ட்ரம்ப் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் ஹமாஸ் வசமுள்ள மீதமுள்ள 76 பேரில் பாதிப்பேர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.