\
H-1B visa rules Indian workers face  fresh scrutiny
H1b visa reuters

2.08 லட்சம் விண்ணப்பங்கள் பாதிப்பு.. H-1B விசாவில் மாற்றம்.. இந்தியர்களுக்கு மீண்டும் சிக்கல்?

அக்டோபர் 14, 2026 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த முன்மொழிவு, ஆண்டுக்கு சுமார் 2.08 லட்சம் விண்ணப்பங்களைப் பாதிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவில் H-1B விசா மூலம் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. விசா கால நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கும்போது, ஏற்கெனவே வழங்கப்பட்ட ஒப்புதல்களையும் மீண்டும் ஆய்வு செய்யும் வகையில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) புதிய விதிமாற்றத்தை முன்மொழிந்துள்ளது.

தற்போதைய நடைமுறையின்படி, ஒரே நிறுவனத்தில், அதே பணியில் தொடர்ந்து வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியரின் H-1B விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கும்போது, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) ஏற்கெனவே வழங்கிய ஒப்புதலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

donald trump
donald trumpreuters

ஆனால், தற்போது இந்த நடைமுறையை மாற்ற DHS திட்டமிட்டுள்ளது. அதாவது, ஏற்கெனவே விசா ஒப்புதல் பெற்றிருந்தாலும், நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் தகுதிகளை ஆய்வு செய்ய முடியும். வேலை, நிறுவனம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லாவிட்டாலும் இந்த மறுஆய்வு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

அக்டோபர் 14, 2026 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த முன்மொழிவு, ஆண்டுக்கு சுமார் 2.08 லட்சம் விண்ணப்பங்களைப் பாதிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. H-1B மட்டுமின்றி L-1, O-1, TN மற்றும் E விசா பிரிவுகளுக்கும் இந்த மாற்றம் பொருந்த வாய்ப்புள்ளது.

முந்தைய ஒப்புதல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விசா நீட்டிப்பு வழங்குவது சரியான நடைமுறை அல்ல என்றும், விண்ணப்பதாரர்களின் தகுதிகளை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை காரணம் தெரிவித்துள்ளது.

usa
usareuters

இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், இந்திய ஊழியர்கள் விசா நீட்டிப்பின்போது கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம். விண்ணப்பப் பரிசீலனை காலமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் வெளிநாட்டுப் பயணம் மற்றும் வேலை தொடர்வதிலும் சிக்கல்கள் ஏற்படலாம்.

எனினும், இந்த விதிமாற்றம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. புதிய விதிமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் வரை தற்போதைய நடைமுறையே தொடரும்.

H-1B visa rules Indian workers face  fresh scrutiny
டிரம்ப் கெடுபிடி எதிரொலி! இந்தியர்களுக்கு IBM கொடுத்த அதிர்ச்சி!