\
Growing rift between Trump and Netanyahu over Iran
Netanyahu & TrumpReuters

ஈரான் மீது போர்.. பணிந்த ட்ரம்ப்.. எகிறிய நெதன்யாகு.. போனில் வெடித்த மோதல்?

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையில் டிரம்ப்-நெதன்யாகு கருத்து மோதல்
Published on: 

செய்தியாளர் - M.மீரா

ஈரான் மீதான போரை மீண்டும் தொடங்குவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசியபோது கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேலின் Ynet ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

iran war
iran war reuters

மத்திய கிழக்கில் அணுசக்தி விவகாரத்தைத் தொடர்ந்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்திய நிலையில், 8 மாதங்களைக் கடந்தும் போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே, ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்களை நடத்தும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக டிரம்ப் அண்மையில் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகள் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரான் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து டிரம்புக்கும் நெதன்யாகுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்களைத் தொடங்க வேண்டும் என்று நெதன்யாகு வலியுறுத்தியதாகவும், ஆனால் டிரம்ப் ராணுவ நடவடிக்கையைத் தவிர்த்து, வளைகுடா நாடுகளின் விருப்பத்திற்கு ஏற்ப பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வு காண விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே இரு தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி உரையாடலின்போது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக Ynet ஊடகம் தெரிவித்துள்ளது.

Trump & Netanyahu
Trump & Netanyahu Reuters

இந்த உரையாடலை இஸ்ரேலின் Ynet News உள்ளிட்ட ஊடகங்கள், "நரகத்திலிருந்து வந்த கூச்சல் போட்டி" (Shouting match from hell) என்று வர்ணித்துள்ளன. இதற்கு முன்பும் டிரம்புக்கும் நெதன்யாகுவுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது, இஸ்ரேலின் போர் உத்திகள் காரணமாக அமெரிக்கர்கள் இஸ்ரேல் மீது வெறுப்படைந்துள்ளதாக டிரம்ப் கடுமையாகச் சாடியதாக Axios ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. குறிப்பாக, "இப்போது அனைவரும் உங்களை வெறுக்கிறார்கள்" (Everybody hates you now) என்று டிரம்ப் கூறியதாக அந்தச் செய்தி கூறியிருந்தது.

இருப்பினும், டிரம்ப் மற்றும் நெதன்யாகு இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாக வெளியான தகவலை நெதன்யாகுவின் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்றும், இரு தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது உண்மைதான் என்றாலும், அதில் எந்தவிதமான மோதலும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள இந்தத் தகவல்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Growing rift between Trump and Netanyahu over Iran
அமெரிக்காவுக்கே ஆட்டம் காட்டிய பாகிஸ்தான்.. ஆதங்கத்தில் ட்ரம்ப்.. ஈரான்தான் காரணமா?