‘கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன் 8’ - மீண்டும் எடுக்க 3 லட்சம் பேர் கோரிக்கை

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன் 8’ - மீண்டும் எடுக்க 3 லட்சம் பேர் கோரிக்கை

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன் 8’ - மீண்டும் எடுக்க 3 லட்சம் பேர் கோரிக்கை
Published on

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ கடைசி சீஸனை மீண்டும் எடுக்கக்கோரி 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் எச்பிஓ நிறுவனத்துக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.

அமெரிக்க கற்பனை நாடகமான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் முதல் எபிசோட் 2011ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி வெளியானது. டேவிட் வெனி ஆஃப் மற்றும் டி.பி.வெய்ஸ் ஆகியோரால் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டது. ஜார்ஜ் ஆர்.ஆர். மார்டின் என்பவரின் ‘A Song of Ice and Fire’ என்ற கற்பனை நாவலை தழுவி எடுக்கப்பட்டதுதான் இந்த ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. இதுவரை 7 சீசன்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு சீசனிலும் 10 எபிசோட்ஸ் அடக்கம். வெஸ்டரோஸிலுள்ள 7 சாம்ராஜ்யங்களை கைப்பற்ற நடக்கும் போர்தான் இந்தத் தொடரின் ஒன் லைனர்.    

உலகின் பல கோடி ரசிகர்களை ஈர்த்த இந்தத் தொடரின் கடைசி சீசனான 8வது சீசன், உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியானது. இந்தியாவில் அடுத்த நாள் வெளியானது. 8வது சீசனில் 6 எபிசோட்ஸ் என அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 2 வருடங்கள் இடைவெளிக்குப் பின் வெளியானதால், உலகம் முழுவதும் உள்ள ‘கேம் ஆக் த்ரோன்ஸ்’ ரசிகர்கள் தங்கள் விரல் நகங்களை கடித்தபடி உச்சகட்ட ஆர்வத்தில் எதிர்பார்த்திருந்தனர். கடைசி சீசன் வின்டர் சீசன் என்பதால், ‘Winter is Coming'- வெயில் காலத்திலும் குளிரை அனுபவிக்க நம்மாட்கள் தயாராக காத்திருந்தனர். மொத்தம் 6 எபிசோட்ஸ் 5 எபிசோட்ஸ் எல்லா திங்கள் கிழமைகளிலும் இந்தியாவில் வெளியாகின. இன்னும் ஒரு எபிசோட் மட்டுமே எஞ்சியிருக்க, அது நாளை வெளியாகவுள்ளது. 

பொதுவாக இந்தத் தொடரில் எதிர்பாராத திருப்பங்களும், நிகழ்வுகளும் சூழ த்ரில் ஆக நகர்வதால் பார்ப்போரை திரை முன் கட்டிப்போட்டுவிடும். ஆனால் கடைசி சீசன் வெளியானதிலிருந்தே பிரபலமாக ஒரு பேச்சு வலம் வந்தது. சீசன் 7 மற்றும் அதற்கு முந்தைய சீசன்ஸ் போல் 8வது சீசன் சுவாரஸ்யமாக இல்லை. 

கொடூர வில்லன்கள்கூட சர்வசாதாரணமாக கொல்லப்பட்டதும், கதையை முடிக்க வேண்டும் என்பதற்காக சரசரவென கதைக்களம் நகர்வதும் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்தது. அதிலும் சென்ற வாரம் வெளியான 5வது எபிசோட்டில் கொடூர வில்லியாக பார்க்கப்பட்ட சர்சி கதாபாத்திரம் சரியாக அமையவில்லை. டினாரஸ் கதாபாத்திரத்தை வில்லியாக பாவித்து டிராகன் மூலம் ஒரு நகரத்தையே அழிப்பது போன்ற காட்சி பல ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துவிட்டதாக பரவலான பேச்சு இணையத்தை சுற்றி வந்தது. ஏகப்பட்ட மீம்ஸ்களும் றெக்கைக்கட்டி பறந்தன.

எனவே, ''தொடரின் கதாபாத்திரங்களை இயக்குநர்கள் சிதைத்துவிட்டனர், கடைசி சீசனை முறையான இயக்குநர்களை வைத்து மறு உருவாக்கம் செய்ய வேண்டும்'' எனக் கூறி எச்பிஓ நிறுவனத்துக்கு change.org என்ற இணையதளம் மூலம்  ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்கள் மனு அளித்துள்ளனர். இந்த மனுவுக்கு 3 லட்சம் கையொப்பங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 8.5 லட்சம் கையொப்பங்களைத் தாண்டி மறு உருவாக்கத்துக்கான எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

மேலும், சில ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று கூகுளில் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் இயக்குநர்களை மோசமான எழுத்தாளர்கள் (Bad Writers) என மாற்றியுள்ளனர். 

ஒருபுறம், ‘கேம் ஆஃப் த்ரோன்ஸி’ன் 8வது சீசன் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் எனத் தொடரின் வெறித்தனமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மறுபுறம், பல எதிர்பார்ப்புகள், திடீர் திருப்பங்கள் எனத் தொடர்கள் அமைவது பொதுவானது. திரைக்கதை என்பது இயக்குநர்களின் பார்வையிலும் அவர்கள் கொண்டு செல்ல விரும்பும் விதத்திலும்தான் அமையும். எனவே மறு உருவாக்கம் தேவைதானா என ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் சில ரசிகர்களும் பரவலாக பேசிக் கொண்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com