ஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா?
இன்னும் 90 நாட்களுக்கு ஹவாய் ஸ்மார்ட்போன்களில் கூகுள் சேவை தொடரும் என அமெரிக்க வர்த்தகத்துறை அறிவித்துள்ளது
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் நிலவி வருகிறது. அதன் அடிப்படையில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஹவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்த்தது. இதனால் கூகுள் நிறுவனம் ஹவாய் போன்களுடனான வியாபார ஒப்பந்தங்களையும், சேவைகளும் நிறுத்துவதாக அறிவித்தது. அத்துடன் கூகுள் மூலம் அதற்கு வழங்கப்பட்ட ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர்களின் உரிமங்களையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்தது.
கூகுள் மூலம் வழங்கப்பட்டு வந்த கூகுள் பிளே என்ற கேம் வசதிகளும், பாதுகாப்பு சேவையையும் ஹவாய் போனில் திரும்பப் பெறுவதாக கூகுள் அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் ஹவாய் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இந்த தடை உத்தரவை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அமெரிக்க வர்த்தகத்துறை அறிவித்துள்ளது. திடீர் தடையால் நிறுவனங்கள் சந்திக்கும் பெரிய அளவிலான பாதிப்புகளை தடுக்கும் விதத்தில் தடை உத்தரவை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் தடை தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைக்கப்படுவதாகவும், விதிக்கப்பட்ட தடையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமெரிக்கா உறுதியாக தெரிவித்துள்ளது.