கூகுள் ட்ராவல் ஆப்பில் ஹனிமூனுக்காக அதிகம் தேடப்பட்ட இடங்கள்
இந்தாண்டு கூகுள் ட்ராவல் ஆப் இல் அதிகம் தேடப்பட்ட இடங்கள் எவை என்பதற்காக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இந்தக் குளிர்காலத்தில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களாக ஹனிமூன் மற்றும் ஆடம்பர வசதியுடைய தங்குமிடங்களே அதிகம் இடம்பிடித்துள்ளன.
பொதுவாக நமக்கு ஏதாவது சந்தேகங்கள் வந்தால் உடனே கூகுளை தேடுவோம். நமக்கான விடைகளை தேடித்தருவதில் கூகுள் அதிகப் பங்கு வகிக்கிறது. அதைபோல ட்ராவல் சம்பந்தமான இடங்களை தேடுவதற்கு கூகுள் ட்ராவல் ஆப் பயன்பட்டு வருகிறது. அதில் இந்தாண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரையில் 27 சதவிகித நபர்கள் விடுமுறை மற்றும் ஹனிமூன் கொண்டாட்டத்திற்கான விஷயங்களை தேடி உள்ளனர். அந்தத் தேடலில் சிசெல்ஸ், மாலத்தீவு மற்றும் பாலித்தீவு ஆகிய இடங்களே அதிகமாக இடம்பிடித்து உள்ளன. இது தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்
இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்த வரையில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை விடுமுறைக் கொண்டாட்டங்கள் மற்றும் ஆடம்பர வசதிகள் கொண்ட தங்குமிடங்களின் தேடல்கள் 34 சதவிகதம் அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 12 மடங்கு அதிகமாகும். இந்த ஆண்டு இந்தியாவிற்குள் அதிகம் சுற்றுலா மேற்கொள்ளப்பட்ட இடமாக கேரளா உள்ளது. உலகளவில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு இடமாக இந்த ஆண்டும் துபாயே உள்ளது.