தனி நபரின் இமெயில் முகவரியை நீக்கப்போகும் கூகுள்! காரணம் என்ன.. கணக்கைத் தொடர என்ன செய்யலாம்?

இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் இருக்கும் இமெயில் முகவரிகளை நீக்க கூகுள் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள், இமெயில்
கூகுள், இமெயில்twitter page

இன்றைய உலகில் இணையதளம் இல்லையென்றால், எதுவும் சாத்தியமில்லை. இணையதளத்தால் விரல்களுக்குள் அடங்கியிருக்கிறது விஞ்ஞானம். அப்படிப்பட்ட இணையதளத்துக்குள் நுழைந்து சில வலைத்தள பக்கங்களைப் பார்க்க வேண்டுமானால், அவற்றுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது பயனர்களின் இமெயில் (மின்னஞ்சல்) முகவரி மட்டுமே. பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், இணையத்தை ஒருவர் பயன்படுத்துவதற்கு, இமெயில் முகவரியே அவசியமாகிறது. அதன் முகவரியைக் கொண்டே அடுத்தடுத்த இணையதள பக்கங்களுக்குள் நுழைய முடியும். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் இருக்கும் இமெயில் முகவரிகளை நீக்க கூகுள் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

உலகளவில் பல பில்லியன் பயனர்களின் கணக்குகளைக் கொண்டிருக்கும் கூகுள் நிறுவனம், கடந்த 16ஆம் தேதி புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாகப் பயன்படுத்தப்படாத கணக்குகளை நீக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதாவது, இந்த கொள்கை மூலம், குறைந்தது 2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத அல்லது உள்நுழையாமல் இருக்கும் தனிப்பட்ட கணக்குகள் நீக்கப்பட இருக்கின்றன. உதாரணமாக, Google Workspace (Gmail, Docs, Drive, Meet, Calendar), YouTube மற்றும் Google Photos ஆகியவற்றில் உள்ள செயலற்ற கணக்குகள் நீக்கப்பட இருக்கின்றன. இந்த பயன்படுத்தப்படாத கணக்குகள் வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹேக் உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்கலாம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய கொள்கையில், ”எங்களுடைய உள்நிறுவன ஆய்வின்படி தற்போது ஆக்டிவ் ஆக இருக்கும் கணக்குகளைக் காட்டிலும் சுமார் 10 மடங்கு பயன்படுத்தாத கணக்குகள் உள்ளன. இவை அனைத்தும் 2-step-verification இல்லாமல் இருப்பதால் எளிதாக ஹேக் செய்யப்படலாம் அல்லது திருடப்படலாம். திருடப்பட்ட கணக்கை வைத்து தனிநபர் தகவல் திருட்டுமுதல் தவறான தகவல்கள்வரை பரப்ப முடியும். அதாவது, ஒரு கூகுள் கணக்கு நீண்டகாலத்திற்கு பயன்படுத்தப்படாவிட்டால், அது ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கணக்கு இருந்ததையே மறந்துவிட்ட அல்லது கவனிக்கப்படாத கணக்குகள் பெரும்பாலும் பாஸ்வேர்டுகளை நம்பியிருக்கும். அப்போது அவை ஹேக் செய்யப்பட்டு தவறான வழிகளில் பயன்படுத்தப்படலாம். அதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக்கணக்குகள் வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்கப்பட இருக்கின்றன.

இதன் முதற்கட்டமாக, முதலில் கணக்கைத் திறந்தது முதல் பயன்படுத்தாமல் இருக்கும் கணக்குகள் நீக்கப்பட உள்ளன. இந்த நடவடிக்கையில் தனிநபர் கணக்குகள் மட்டுமே நீக்கம் செய்யப்படும், பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் தொடர்பான கணக்குகள் நீக்கம் செய்யப்படாது. அதேநேரத்தில், ஒரு கணக்கை நீக்கும்முன்பு, அதுகுறித்து அவர்களுடைய இமெயில் முகவரிக்கு அறிவிப்புகள் அனுப்பப்படும்” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, கூகுள் கணக்குகளைக் காப்பாற்ற வேண்டுமானால், உடனடியாக 2 வருடங்களாப் பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் கணக்கை லாக்இன் செய்து ஆக்டிவாக மாற்றினால் போதும், அவர்களுடைய நீக்க அறிவிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தவிர, உங்கள் கணக்கையும் புதுப்பித்துக் கொண்டது மாதிரி இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com