பாலியல் தொல்லை: கூகுளில் இருந்து 48 பேர் அதிரடி நீக்கம்!
கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் குற்றச்சாட்டில் தொடர்புடைய 13 மூத்த அதிகாரிகள் உட்பட சுமார் 48 பேரை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
பணியிடங்களிலும், பொது இடங்களிலும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை, சமூக வலைதளங்களில் #Metoo என்ற ஹேஷ் டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். இதில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் நடிகைகள் மற்றும் இசைக்கலைஞர்கள் பலரும் தங்களது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிகை, கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய ஆண்ட்ராய்ட் ஜாம்பவானாக திகழ்ந்த ஆண்டி ரூபினுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு 9 கோடி டாலர் கொடுத்து பணியில் இருந்து அனுப்பியது. ஆனால் தற்போதுவரை அவர் பணி விலகலுக்கு கூகுள் நிறுவனம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருந்ததை மறைத்துள்ளதாக செய்தி வெளியிட்டி ருந்தது.
இந்நிலையில் ஆண்டி ரூபன், உடன் பணி புரிந்த உதவியாளர் ஒருவரிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகவும் இதற்காகதான் அவரை பணி நீக்கம் செய்ததாகவும் கூகுள் நிறுவனரான, லாரி பேஜ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கூகுள் நிறுவனம் இந்த விவகாரத்தை மறைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடர்புடைய மூத்த அதிகாரிகள் உட்பட 48 பேரை பணி நீக்கம் செய்துள்ளார்.
இதுபற்றி சுந்தர் பிச்சை கூறும்போது, ‘பணியிடத்தில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவது முக்கியம். அதனடிப்படையில் வந்த ஒவ்வொரு புகாரையும் விசாரித்து, நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.